டேராடூன் :உத்தரகாண்ட் சட்டபேரவை கூட்டத்தில் முதலமைச்சர் தாக்கல் செய்த பொது சிவில் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது. நாட்டின் முதல் மாநிலமாக உத்தரகாண்ட் சட்டப் பேரவையில் பொது சிவில் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டு உள்ளது. உத்தரகாண்டை தொடர்ந்து மற்ற மாநிலங்களும் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி தெரிவித்தார்.
உத்தராகண்ட் மாநிலத்தில் பாஜக தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த வாரம் உத்தரகாண்ட் சட்டப் பேரவை கூட்டத் தொடர் தொடங்கியது. இந்நிலையில், கடந்த பிப்ரவரி 6ஆம் தேதி மாநில சட்டசபையில் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி பொது சிவில் சட்ட (Uniform Civil Code - UCC) மசோதாவை தாக்கல் செய்தார்.
இதைத் தொடர்ந்து மசோதாவை படித்து புரிந்து கொள்ள கால அவகாசம் அளிக்க வேண்டும் என எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் கோரிக்கை விடுத்ததை அடுத்து அவை மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. மேலும் பல உறுப்பினர்கள் இதை பரிசீலிக்க விரும்பியதால், இந்த மசோதா மீதான விவாதம் (இன்று பிப். 7) தொடர்ந்து நடைபெற்றது.
மசோதா மீதான உரையில் பேசிய முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி, உத்தராகண்ட் சட்டப்பேரவையில் அறிமுகப்படுத்தப்பட்ட பொது சிவில் சட்டம், உத்தரகாண்ட், 2024 மசோதா, திருமணம், விவாகரத்து, வாரிசுரிமை, லிவ்-இன் உறவுகள் ஆகியவற்றை மட்டுமே குறிக்கிறது. உத்தராகண்ட் மாநிலத்தில் வசிக்கும் அனைத்து சாதி, மதத்தினருக்கும் இது பொருந்தும் என்று மசோதா தெளிவாகக் கூறுகிறது.