லக்னோ:உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோ மாவட்டத்தில் உள்ள பல்ராம்பூர் மருத்துவமனையில், ஹியூமன் மெட்டாப் நியூமோ வைரஸ் (HMPV) தொற்றுக்கு உள்ளானதாக சந்தேகிக்கப்படும் 60 வயது பெண் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
லக்னோவைச் சேர்ந்த அந்தப் பெண்ணுக்கு ஜனவரி 9-ம் தேதி தனியார் ஆய்வகத்தில் நடத்தப்பட்ட சோதனைகளின் போது HMPV வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டது, ஆனால், ஜனவரி 10 ஆம் தேதி KGMU என அழைக்கப்படும் லக்னோவில் உள்ள மன்னர் ஜார்ஜ் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் உள்ள ஆய்வகத்தில் நடத்தப்பட்ட சோதனையின் போது அவருக்கு HMPV வைரஸ் தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது.
பல்ராம்பூர் மருத்துவமனையின் மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் ஹிமான்ஷு சதுர்வேதி, அந்தப் பெண்ணின் HMPV சோதனை முடிவுகள் எதிர்மறையாக வந்ததாகக் கூறினார். அந்த பெண்ணைப் பொறுத்தவரை, அவர் காசநோய், சிறுநீரக நோய், உயர் ரத்த அழுத்தம் மற்றும் இதயப் பிரச்னைகள் உள்ளிட்ட பல உடல்நலப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டிருந்தார். திங்களன்று அவரது உடல்நிலை மோசமடைந்ததால், அவர் ஐசியுவுக்கு மாற்றப்பட்டார். சிகிச்சையின் போது, துரதிர்ஷ்டவசமாக அவர் உயிரிழந்தார். டாக்டர் ஏ.கே. குப்தா மற்றும் டாக்டர் விஷ்ணு ஆகியோர் பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டும் அந்த பெண்ணை காப்பாற்ற முடியவில்லை என்றார்.
முதலில் நவம்பர் 22 ஆம் தேதி அந்தப் பெண் பல்ராம்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். முன்னதாக, இருமல் மற்றும் காய்ச்சல் ஏற்பட்டதால், அந்தப் பெண் சில உள்ளூர் மருத்துவர்களிடம் சிகிச்சைப் பெற்றுள்ளார். ஆனால் சிகிச்சை அவர் பலன் தரவில்லை. பின்னர், கான்பூர் சாலையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது, அங்கு மருத்துவர்கள் நிமோனியா மற்றும் HMPV வைரஸ் இருப்பதாக சந்தேகித்தனர். பின்னர் அந்தப் பெண்ணின் உடல்நிலை மோசமடைந்ததால், பல்ராம்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், அங்கு அவர் தீவிர சிகிச்சைக்காக ICU க்கு மாற்றப்பட்டார்.
பரிசோதனைக்காக ரத்தம் பரிசோதனை செய்யப்பட்டது. முதல் சோதனையில் ஒன்றும் இல்லை என்று தெரிய வந்தது. இருப்பினும், ஜனவரி 7 ஆம் தேதி, அவரது உடல்நிலை மீண்டும் மோசமடைந்த போது, மேலும் ஒரு முறை பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அந்தப் பெண்ணுக்கு HMPV தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இருப்பினும், ஜனவரி 10 ஆம் தேதி KGMU ஆய்வகத்தில் மீண்டும் HMPV சோதனை செய்யப்பட்டபோது, அதில் அவருக்கு தொற்று இல்லை என தெரிய வந்தது.