புதுடெல்லி: மத்திய அரசின் அனைத்து ஊழியர்களுக்கான ஊதியம் மற்றும் ஒய்வூதியதாரர்களுக்கான பணப் பலன்களை நிர்ணயம் செய்வதற்கான 8-வது ஊதியக் குழுவை அமைக்க பிரதமர் நரேந்திர மோடி ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.
டெல்லியில் உள்ள தேசிய ஊடக மையத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது, மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், "மத்திய அரசின் அனைத்து ஊழியர்களுக்கும் 8-வது ஊதியக் குழுவை அமைக்க பிரதமர் நரேந்திர மோடி ஒப்புதல் அளித்துள்ளார்" என்றார்.
1947 முதல், 7 ஊதியக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன, கடைசியாக 2016-ல் அமைக்கப்பட்ட 7-வது ஊதியக் குழுவின் பதவிக்காலம் 2026-ல் நிறைவடைகிறது. இதனால், 8-வது ஊதியக்குழுவின் செயல்பாடுகளை தொடங்குவதற்காகவும், அது முடிவடைவதற்கு முன்பு பரிந்துரைகளைப் பெறவும் மறுபரிசீலனை செய்யவும் போதுமான நேரத்தை உறுதி செய்வதற்கான நடவடிக்கை தொடங்கியுள்ளது என்றார் அஸ்வினி வைஷ்ணவ்.
மேலும், ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோவின் சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் 3-வது ஏவுதளத்தை அமைப்பதற்கும் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட்டதாகவும் அவர் கூறினார்.
"மூன்றாவது ஏவுதளத் திட்டம், இஸ்ரோவின் அடுத்த தலைமுறை ஏவுதள வாகனங்களுக்காக ஸ்ரீஹரிகோட்டாவில் ஏவுதள உள்கட்டமைப்பை நிறுவுவதையும், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இரண்டாவது ஏவுதளத்திற்கான மாற்று ஏவுதளமாகவும் நோக்கமாகக் கொண்டுள்ளது. இது எதிர்காலத்தில் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் திட்டங்களுக்கான ஏவுதளத் திறனையும் மேம்படுத்தும்" என்று அவர் சுட்டிக் காட்டினார்.
முந்தைய ஏவுதளங்களை நிறுவுவதில் இஸ்ரோவின் அனுபவத்தை முழுமையாகப் பயன்படுத்தி, தற்போதுள்ள ஏவுதள வளாக வசதிகளை அதிகபட்சமாகப் பகிர்ந்து கொள்வதன் மூலம் அதிகபட்ச தொழில்துறை பங்கேற்புடன் இது செயல்படுத்தப்படும். TLP 48 மாதங்கள் அல்லது 4 ஆண்டுகளுக்குள் நிறுவ இலக்கு வைக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்திற்காக மொத்தம் எதிர்பார்க்கப்படும் செலவு ரூ.3984.86 கோடி மற்றும் ஏவுதளம் மற்றும் அதனுடன் தொடர்புடைய வசதிகளை நிறுவுதல் ஆகியவை இதில் அடங்கும்.