பிதர்: கர்நாடக மாநிலம் பிதர் நகரின் சிவாஜி சவுக்கில் எஸ்பிஐ ஏடிஎம் மையம் உள்ளது. இந்த ஏடிஎம் மைய இயந்திரத்தில் பணத்தை நிரப்புவதற்காக அதற்கான பாதுகாப்பு வாகனத்தில் ஊழியர்கள் இன்று காலை 10.30 மணியளவில் வந்துள்ளனர். அப்போது, இரு சக்கர வாகனத்தில் அங்கு வந்த மர்ம நபர்கள் இரண்டு பேர், பாதுகாப்பு ஊழியர்கள் மீது திடீரென துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். மொத்தம் ஆறு ரவுண்டு சுட்டதில் பாதுகாப்பு ஊழியர்கள் இரண்டு பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
தொடர்ந்து அந்த மர்ம நபர்கள் வாகனத்தில் இருந்த பணப் பெட்டியை தூக்கிக் கொண்டு, இரு சக்கர வாகனத்தில் தப்பி சென்றுள்ளனர். அந்த பெட்டியில் 93 லட்சம் ரூபாய் பணம் இருந்துள்ளது. மேலும், இந்த துப்பாக்கி சூட்டில் காவலாளரி ஒருவர் உயிரிழந்துள்ளார். மற்றொருவர் பலத்த காயம் அடைந்துள்ளார்.
துப்பாக்கி சூடு
பட்டப்பகலில், பொதுமக்கள் மத்தியில் நடந்த இந்த கொள்ளை சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி திடுக்கிட வைத்துள்ளது. அதில், கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்கள் இருவரும் ஏடிஎம் இயந்திரத்தில் பணத்தை நிரப்புவதற்காக பணப்பெட்டியை ஊழியர்கள் வெளியில் எடுத்து வரும் வரைக்கும் காத்திருக்கின்றனர். பின்னர் ஊழியர்கள் வாகனத்தின் கதவை திறந்து பெட்டியை எடுத்து வரும்போது திடீரென வந்த மரம் நபர்கள் அவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர்.
இதில் காவலாளி ஒருவர் ரத்த வெள்ளத்தில் சரிந்து கீழே விழ, எஞ்சியவர்கள் அலறி அடித்து ஓடியுள்ளனர். பின்னர் கொள்ளையர்களில் ஒருவர் பைக்கை எடுக்க, மற்றொருவர் பணப்பெட்டியை தூக்க முடியாமல் தூக்கிய போது பாரம் தாங்காமல் பெட்டியுடன் கீழே விழுவதும், பின்னர் இருவரும் சேர்ந்து பணத்தை அள்ளிப்போட்டு அந்த பெட்டியை பெட்ரோல் டேங்க் மீது வைத்துக்கொண்டு அங்கிருந்து தப்பி செல்வதும் சிசிடிவி-யில் பதிவாகியுள்ளது.
இதையும் படிங்க: பாலிவுட் நடிகர் சைஃப் அலி கான் நலம்...முதுகெலும்பில் குத்தியிருந்த கத்தி அகற்றம்!
ரூ.93 லட்சம்
93 லட்சம் ரூபாய் நிரப்பப்பட்ட பெட்டியை முகமூடி அணிந்த இருவர் துப்பாக்கி முனையில் கொள்ளை அடித்து சென்றதும், இந்த சம்பவத்தில் காவலாளி ஒருவர் கொல்லப்பட்டிருப்பதும் கர்நாடகாவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், கொள்ளை சம்பவம் நடந்த இடத்துக்கு அருகே தான் மாவட்ட ஆட்சியர் அலுவலகமும் உள்ளது. இந்த சம்பவம் குறித்து மாவட்ட எஸ்பி பிரதீப் குண்டே, கூடுதல் எஸ்பி சந்திரகாந்தா பூஜாரி மற்றும் பிற மூத்த அதிகாரிகள் நேரில் விசாரணை நடத்தி வங்கியின் ஏடிஎம்மில் இருந்து சேகரிக்கப்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.
காவலாளி உயிரிழப்பு
இச்சம்பவம் குறித்து பிதர் மாவட்ட எஸ்பி பிரதீப் குண்டே கூறுகையில், காலை 10.30 மணியளவில் பாதுகாப்புப் பணியாளர்கள் எஸ்பிஐ ஏடிஎம்மில் பணம் நிரப்ப வந்த போது கொள்ளையர்கள் தாக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். துப்பாக்கிச் சூட்டில் காவலாளி கிரி வெங்கடேஷ் உயிரிழந்துள்ளார். மற்றொருவர் காயமடைந்தார். பெரிய தொகையுடன் தலைமறைவானவர்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளோம். எவ்வளவு பணம் கொள்ளை போயுள்ளது என்பது குறித்த தகவலுக்காக காத்திருக்கிறோம்'' என்றார்.