தருமபுரி: உலகமுழுக்க உள்ள தமிழர்களால் பொங்கல் பண்டிகை இந்தாண்டும் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. கிராம தெருக்கள் தொடங்கி, மாநகரங்கள் வரை சாதி, மத பேதமின்றி சமத்துவ பொங்கலாவும் தமிழர்கள் பொங்கலை ஒற்றுமையுடன் கொண்டாடி வருகின்றனர். தமிழர்கள் எங்கெல்லாம் உள்ளனரோ அங்கெல்லாம் குழுவாக சேர்ந்து பேச்சு போட்டி, கவிதை போட்டி, ஓட்ட பந்தயம், உறியடி, சிலம்ப போட்டி, பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் என பொங்கல் பண்டிகை தமிழ் கலாச்சாரத்தின் நினைவூட்டலாகவும் கொண்டாடப்பட்டு வருகிறது.
பொங்கல் நிகழ்ச்சின்போது அந்தந்த பகுதிகளில் சில வித்தியாச போட்டிகளும் இடம்பெறுகின்றன. அந்த வகையில், தருமபுரியில் ஏற்பாடு செய்யப்பட்ட பொங்கல் விழாவில் கணவன் மனைவியை தூக்கிக் கொண்டு ஓடும் போட்டி இடம்பெற்றிருந்தது பொதுமக்களை கலகலப்பில் ஆழ்த்தியது.
தருமபுரி அருகே காணும் பொங்கலையொட்டி வித்தியாசமாக கணவன் மனைவியை தூக்கிக் கொண்டு ஓடும் போட்டியும், சிக்கன் சாப்பிடும் போட்டியும் நடந்துள்ளது.
தருமபுரி மாவட்டம், முக்கல்நாயக்கம்பட்டி கிராமத்தில் ஆண்டு தோறும் பொங்கல் பண்டிகை முன்னிட்டு விளையாட்டு போட்டிகள் நடத்துவது வழக்கம். இந்நிலையில், காணும் பொங்கல் தினமான இன்று (ஜன.16) கணவன் மனைவியை தூக்கிக் கொண்டு ஓடும் போட்டி, கணவன் மனைவியை தாங்கி பிடிக்கும் போட்டி, பண் சாப்பிடும் போட்டி, ஒரு கிலோ சிக்கன் சாப்பிடும் போட்டி உள்ளிட்டவை நடைபெற்றது.
இதையும் படிங்க: நாங்களும் பொங்கல் கொண்டாடுவோம்.. சென்னை ஏர்போர்ட் சிஐஎஸ்எப் வீரர்கள் அதகளம்..!
நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட சிக்கன் சாப்பிடும் போட்டியில் கஜேந்திரன் என்பவர் மூன்று நிமிடத்தில் ஒரு கிலோ சில்லி சிக்கன் சாப்பிட்டு சாப்பாட்டு ராமனாக வெற்றி பெற்றார்.
இதனை அடுத்து பெண்களுக்கான பிரியாணி சாப்பிடும் போட்டி நடைபெற்றது. இரண்டரை நிமிடத்தில் பெண்மணி ஒருவர் சிக்கன் பிரியாணியை சாப்பிட்டு வெற்றி பெற்றார். முக்கல்நாயக்கன்பட்டி கிராம மக்கள் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையொட்டி ஒன்று சேர்ந்து விதவிதமான விளையாட்டுப் போட்டிகளை நடத்தி பரிசு வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
பொங்கல் பண்டிகையை வழக்கமான முறையில் கொண்டாடுவதை தாண்டி, ஊர் மக்கள் ஒற்றுமையாக இருந்து இதுபோன்ற கலகலப்பான விளையாட்டுகளை போட்டியில் சேர்த்து மகிழ்ச்சியாக பண்டிகையை கொண்டாடுவது கவனம் பெற்றுள்ளது.