சென்னை: தமிழ்நாடு சட்டப் பேரவை அடுத்த மாதம் 14-ந் தேதி கூடும் நிலையில், வரும் 25-ந் தேதி அமைச்சரவை கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சட்டப் பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடர் மார்ச் 14 ஆம் தேதி கூடுகிறது. அன்றைய தினமே நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது. சட்டமன்றம் எத்தனை நாட்கள் நடைபெறும்? வேளாண் பட்ஜெட் எப்போது? உள்ளிட்டவை எல்லாம் அலுவல் ஆய்வு குழு கூட்டம் கூடி முடிவு எடுக்கப்பட உள்ளது.
இந்நிலையில் 2025- 26 ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசு நிதிநிலை தயாரிப்பு தொடர்பாக நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையில் தலைமைச் செயலகத்தில் கூட்டம் நடைபெற்று வருகிறது. தலைமைச்செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் நேற்றைய தினம் கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகள், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள், பள்ளிக்கல்வி துறை, உயர்கல்வி துறை, மருத்துவத்துறை ஆகிய துறைகளை சேர்ந்த அமைச்சர்கள் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகளுடன் நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு 2025-26 தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டார்.
இன்று இரண்டாம் நாளாக பல்வேறு துறை சார்ந்த அமைச்சர்கள் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் உடன் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் கூட்ட அரங்கில் கூட்டம் நடைபெற்றது. இன்றைய கூட்டத்தில் சமூக நலத்துறை, குழந்தைகள் பாதுகாப்பு, ஆதி திராவிடர், பழங்குடியினர், சிறுபான்மையினர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், இந்து சமய அறநிலைய துறை, சுற்றுச்சூழல், மாற்றுத்திறனாளிகள், மூன்றாம் பாலினத்தவர் ஆகிய துறைகளைச் சேர்ந்த அமைச்சர்கள் அதிகாரிகள் மற்றும் அந்த துறைகளைச் சார்ந்தவர்கள் ஆகியோருடன் நிதி துறை அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று ஆய்வு மேற்கொண்டார்.
இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் பொன்முடி, மூர்த்தி, நாசர், மெய்யநாதன், மதிவேந்தன், ராஜேந்திரன், கீதாஜீவன், உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்த ஆலோசனைகளுக்கு பிறகு நிதிநிலை அறிக்கை தயார் செய்ய உள்ளனர். கடந்த 10 ஆம் தேதி அமைச்சரவை கூட்டம் நடைப்பெற்ற நிலையில், நிதி நிலை அறிக்கையை 25 ஆம் தேதி நடைபெறும் அமைச்சரவை கூட்டத்தில் வைக்கப்பட்டு ஒப்புதல் பெறப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் இந்த ஆட்சியின் கடைசி முழு பட்ஜெட் என்பதால் பல்வேறு புதிய அறிவிப்புகளுக்கு ஒப்புதல் அளிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மகளிர் உரிமை தொகை பயனாளிகளின் எண்ணிக்கை உயர்த்தப்படவும் இந்த அமைச்சரவை கூட்டம் ஒப்புதல் அளிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.