ராணிப்பேட்டை: வீட்டில் பிரசவித்த தாயும்,சேயும் மரணம் அடைந்த நிலையில், தாய் மயக்க நிலையில் இருப்பதாக அரசு மருத்துவமனையில் சேர்த்து நாடகம் ஆடிய பெண்ணின் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு திருநாவுக்கரசு தெருவில் வசித்து வரும் தமிழ்ச் செல்வன் என்பவரின் மனைவி ஜோதி(31) . இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் ஜோதி நான்காவது முறையாக கருத்தரித்தார்.
நிறைமாத கர்ப்பிணியான அவர், பொங்கல் திருவிழாவை முன்னிட்டு ஆற்காட்டில் உள்ள தாய் வீட்டுக்கு ஜோதி சென்றிருந்தார். அப்போது விடியற்காலையில் அவருக்கு பிரசவ வலி நேரிட்டது. உடனே அவரை மருத்துவமனையில் அனுமதிக்காமல், அவருக்கு அவரது தாயார் ஜோதி என்பவரே பிரசவம் பார்த்தாக கூறப்படுகிறது.
எனினும், தாயும், சேயும் மரணம் அடைந்து விட்டதாக தெரிகிறது. இந்த நிலையில் இறந்த பச்சிளம் குழந்தையை கட்டைப்பையில் போட்டு மறைத்து வைத்து விட்டு, பிரசவித்த பெண் ஜோதி மயக்கமாக இருப்பதாக கூறி அவரை ஆற்காடு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். ஜோதியை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு பிரசவம் ஆகியிருப்பதையும், அதன் காரணமாக அவர் மரணம் அடைந்து விட்டதையும் கண்டுபிடித்தனர். இதையடுத்து ஜோதியை கொண்டு வந்த பெண்ணிடம் மருத்துவர்கள் விசாரணை செய்தனர்.
இதையும் படிங்க: பழ.நெடுமாறன் தொடர்ந்த பாஸ்போர்ட் வழக்கு - உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
அப்போது அந்தப் பெண், வீட்டிலேயே தமது மகள் ஜோதிக்கு பிரசவம் நடந்ததாகவும் அப்போது தாயும், சேயும் இறந்து விட்டதாகவும், குழந்தையை கட்டைப்பையில் போட்டு வீட்டில் வைத்திருப்பதாகவும், தாயை மயக்கம் அடைந்ததாக கூறி மருத்துவமனைக்குக் கொண்டு வந்ததாகவும் கூறியிருக்கிறார். இதையடுத்து இது குறித்து மருத்துவர்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
ஆற்காடு நகர காவல் துறையினர் ஜோதியின் வீட்டிற்கு சென்று கட்டைப் பையில் மறைத்து வைத்திருந்த குழந்தையை மீண்டும் மருத்துவமனைக்கு எடுத்து வந்தனர். பின்னர் தாய், குழந்தையின் சடலங்களை பிரேத பரிசோதனைக்காக அடுக்கும்பாறை அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். ஜோதியின் தாயார் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஜோதிக்கு வயிற்று வலி நேரிட்டபோதே மருத்துவமனைக்கு அழைத்து வந்திருந்தால் தாய், சேய் இருவரையும் காப்பாற்றி இருக்கலாம் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.