மும்பை: பாலிவுட் நடிகர் சைஃப் அலி கான், கத்தியால் தாக்கப்பட்டதால் முதுகு தண்டுப் பகுதியில் காயங்கள் நேரிட்டது. முதுகு தண்டில் கத்தி சிக்கிக் கொண்டது. இதனைத் தொடர்ந்து லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரின் முதுகு தண்டு வடத்தில் சிக்கியிருந்த 2.5 இன்ஞ்ச் நீளம் கொண்ட கத்தியின் பிளேடு அகற்றப்பட்டது.
மும்பையின் பந்த்ரா பகுதியில் உள்ள சத்குரு சரண் கட்டடத்தில் உள்ள குடியிருப்பில் நடிகர் சைஃப் அலி கான் வசித்து வருகிறார். அவரது வீட்டில் உள்ள பணிப்பெண்ணாக பணியாற்றும் ஒருவரை சந்திக்க வந்த நபர் ஒருவர் திடீரென அந்தப் பணிப்பெண்ணை கத்தியை எடுத்து தாக்கியதாக கூறப்படுகிறது. அப்போது அங்கிருந்த நடிகர் சைஃப் அலிகான் அதனை தடுக்க முயன்றார். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த நபர் சைஃப் அலிகானையும் தாக்கினார்.
இதனால் காயம் அடைந்த சைஃப் அலிகான் மும்பை லீலாவதி மருத்துவமனையில் அதிகாலை 2 மணிக்கு அனுமதிக்கப்பட்டார். அவரது முதுகு தண்டு பகுதியில் கத்தியின் பிளேடு சிக்கிக் கொண்டதால் அதனை அறுவை சிகிச்சை செய்து எடுப்பதற்கான முயற்சியில் மருத்துவர்கள் ஈடுபட்டனர். முதுகெலும்பில் இருந்து வடியும் திரவத்தை சரி செய்யவும் டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். மேலும் அவரது இடது கையில் உள்ள ஆழமான காயம், கழுத்துப் பகுதியில் இருந்த காயம் ஆகியவற்றுக்கும் மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர்.
இதையும் படிங்க: சொந்த ஊர் சென்றவர்கள் கவனத்திற்கு....ஜன.19-ல் மதுரை - சென்னை மெமு ரயில் சேவை!
லீலாவதி மருத்துவமனையின் மருத்துவர் நிதி டாங்கே, "சைஃப் அலி கான் அபாய கட்டத்தை தாண்டி விட்டார். இப்போது அவரது உடல் நிலை முழுமையாக சீராக இருக்கிறது," என்றார். சைஃப் அலி கான் உடல் நிலை குறித்து பேசிய லீலாவதி மருத்துவமனையின் சிஇஓ, மருத்துவர் நிராஜ் உத்தமணி, "அவசர சிகிச்சைப் பிரிவில் சைஃப் அலி கான் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது முதுகு தண்டில் இருந்த கத்தி வெற்றிகரமாக அகற்றப்பட்டது. நியூரோ அறுவை சிகிச்சை, பிளாஸ்டிக் சர்ஜரி ஆகியவை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டன. அவர் மீண்டு வருகிறார். நூறு சதவிகிதம் அவர் குணம் அடைவார் என்று நாங்கள் எதிர்பார்கின்றோம்," என்றார்.
இது குறித்து பேசிய 9ஆவது மண்டல துணை காவல் ஆணையர் தீக்ஷித் ஜெடாம், "மொத்த சம்பவத்தையும் பார்க்கும் போது இது ஒரு கொள்ளை முயற்சி சம்பவம் போல தெரிகிறது. தீ அவசர வழி பகுதியில் மர்ம நபர் சைஃப் அலி கான் வீட்டுக்குள் நுழைந்திருக்கிறார். அந்த நபரை கைது செய்ய முயற்சி செய்து வருகின்றோம். பத்து குழுக்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றன,"என்றார்.