ஐதராபாத்: 18வது மக்களவை தேர்தல் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி நாடு முழுவதும் ஜூன் 1ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெற்றன. மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று (ஜூன்.4) எண்ணப்படுகின்றன. இந்நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பில் எதிர்கட்சிகள் ஆளும் மாநிலங்களான ஆந்திர பிரதேசம், தெலங்கானா, கர்நாடகா, மேற்கு வங்கம், பஞ்சாப் மகாராஷ்டிரா, டெல்லி ஆகிய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் பாஜக கணிசமான இடங்களை கைப்பற்றும் எனக் கூறப்பட்டது.
கணிக்க முடியாத மாநிலங்களாக கருதப்படும் இந்த மாநிலங்களின் நிலவரம் குறித்து இந்த செய்தியில் காணலாம்.
கர்நாடகா:காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் முக்கியத்தக்க மாநிலமாக காணப்படுவது கர்நாடகா. அங்கு வெளியான தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளில் மொத்தம் உள்ள 28 மக்களவை தொகுதிகளில் பாஜக 25 தொகுதிகள் வரை கைப்பற்றக்கூடும் எனக் கூறப்பட்டது. இந்தியா டுடே மற்றும் ஆக்சிஸ் மை இந்தியா நிறுவனங்கள் இணைந்து நடத்திய கருத்து கணிப்பு முடிவுகளில் கர்நாடகாவில், பாஜக கூட்டணி 23 முதல் 25 தொகுதிகளில் வெற்றி பெறும் எனக் கூறப்பட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சி 3 முதல் 5 தொகுதிகளில் மட்டுமே வெல்லும் என இந்தியா டுடே - ஆக்சிஸ் மை இந்தியா நிறுவனங்கள் கணித்துள்ளது. முன்னதாக கடந்த 2019 ஆண்டு மக்களவை தேர்தலில் கர்நாடகாவில் உள்ள 28 தொகுதிகளில் பாஜக 25 தொகுதிகளை வென்று இருந்தது குறிப்பிடத்தக்கது. அப்போது மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி 1 இடத்தில் வென்றிருந்தது. தற்போது மதச்சார்பற்ற ஜனதா தளம் பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கிறது.
டெல்லி: தலைநகர் டெல்லியை பொறுத்தவரை அங்குள்ள மக்களின் தொலைநோக்கு என்பது மற்ற மாநில மக்களை காட்டிலும் முற்றிலும் மாறுபட்டதாக காணப்படும். மாநிலத்தின் ஆட்சிக்கு ஆம் ஆத்மி, மத்தியில் ஆட்சிக்கு பாஜக என்பதையே கொள்கையாக கொண்டவர்கள எனக் கூறலாம்.
அந்த வகையில் 2024 மக்களவை தேர்தலில் பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் பாஜகவிற்கு சாதகமாக அமைந்துள்ளன. ஆக்சிஸ் மை இந்தியா வெளியிட்டுள்ள கருத்துக் கணிப்புகளின் படி டெல்லியில் பாஜக 6 முதல் 7 இடங்களை கைப்பற்றும் என்றும் இந்தியா கூட்டணிக்கு ஒரு இடம் கூட கிடைக்கப் போவதில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.
அதேபோல் டுடே சாணக்கியா நிறுவனம் வெளியிட்டுள்ள கருத்துக் கணிப்பு முடிவுகளில் பாஜக 6 இடங்கள் வரை கைப்பற்றும் எனக் கூறப்பட்டுள்ளது. முன்னதாக கடந்த 2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் டெல்லியில் உள்ள 7 தொகுதிகளிலும் பாஜக வென்று இருந்தது குறிப்பிடத்தக்கது.
மேற்கு வங்கம்மாநிலத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மொத்தமுள்ள 42 மக்களவை தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுகிறது. 2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் 22 இடங்களையும் பாஜக 18 தொகுதிகளையும் கைப்பற்றின. காங்கிரஸ் கட்சி இரண்டு இடங்களை மட்டுமே வென்றிருந்தன.