புதுடெல்லி: எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி, தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்ய முயன்றபோது, அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவத்துக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக புதுடெல்லியில் உள்ள இலங்கைக்கான தூதரை இன்று காலை நேரில் அழைத்த வெளியுறவுத் துறை அமைச்சக உயரதிகாரிகள், தமிழக மீனவர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்கு இந்தியாவின் கடுமையான கண்டனங்களை தெரிவித்தனர். இலங்கை தலைநகர் கொழும்பில் உள்ள அந்நாட்டுக்கான இந்திய தூதரும் இலங்கை அரசின் வெளியுறவு துறை அமைச்சகத்திடம் இந்தச் சம்பவம் குறி்தத இந்தியாவின் கண்டனத்தை அழுத்தமாக பதிவு செய்துள்ளார்.
மீனவர்களின் பிரச்னையை அவர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு, மனிதாபினத்துடன் அணுக வேண்டும் என்று இந்திய அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. எந்தவொரு சூழ்நிலையிலும் மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்துவது ஏற்புடையதல்ல என்று தெரிவித்துள்ள வெளியுறவுத் துறை அமைச்சகம், மீனவர்கள் தொடர்பாக இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையே உள்ள புரிதல் தொடர்ந்து கடைபிடிக்கப்பட வேண்டியது அவசியம் என்றும் வெளியுறவுத் துறை அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.
Press release: India lodges strong protest on an incident involving firing by the Sri Lankan Navy during apprehension of Indian fishermen.
— Randhir Jaiswal (@MEAIndia) January 28, 2025
🔗 https://t.co/6hnlWDHFxn
முன்னதாக, இன்று அதிகாலை புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் இருந்து 360 விசைப்படகுகள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். இந்நிலையில் இலங்கை நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த போது, அப்பகுதிக்கு ரோந்து வந்த இலங்கை கடற்படை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக குற்றச்சாட்டை முன் வைத்து புதுக்கோட்டையைச் சேர்ந்த ஒரு விசைப்படகையும், அதில் இருந்த 13 மீனவர்களையும் சிறை பிடித்துள்ளது.
மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகவும், அப்போது அவர்களை விரட்டிப் பிடிக்கும் போது, மீனவர் படகை நோக்கி லப்பர் குண்டால் சுட்டதாகவும், இதில் விசைப்படகு கண்ணாடி உடைந்து இரண்டு மீனவர்களுக்கு தோள்ப்பட்டையில் காயம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
காயமடைந்த இரு மீனவர்களும் யாழ்ப்பாணம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ச்சியாக இலங்கை கடற்படையின் கைது நடவடிக்கையால் மீனவர்கள் மிகுந்த கவலை அடைந்துள்ளனர். இதற்கு மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.