சென்னை: ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசிய ரவுடி கருக்கா வினோத் பூந்தமல்லி என்ஐஏ நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட போது, நீதிபதி முன்னால் கருக்கா வினோத் காலணிகளை வீசியதாக வெளியாக செய்தி பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை கிண்டியில் ஆளுநர் மாளிகை முன்பு கடந்த 2024ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் பெட்ரோல் குண்டுகள் வீசிய வழக்கில், நந்தனத்தைச் சேர்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளி ரவுடி கருக்கா வினோத் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பின்னர் இந்த வழக்கை தேசிய புலனாய்வு முகமை (NIA) அதிகாரிகள் கையில் எடுத்து விசாரணை செய்து வருகின்றனர்.
தற்போது இந்த வழக்கு விசாரணை தொடர்பாக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு, இறுதி கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில், நேற்று சென்னை பூந்தமல்லியில் உள்ள என்ஐஏ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்காக ரவுடி கருக்கா வினோத்தை போலீசார் ஆஜர்படுத்தினர்.
அப்போது யாரும் எதிர்பாராத விதமாக ரவுடி கருக்கா வினோத் தனது இரண்டு காலணிகளையும் எடுத்து விசாரணைக்கு அமர்ந்து இருந்த நீதிபதிகள் முன்பு ஒன்றன் பின் ஒன்றாக வீசியதாகவும், அவற்றில் ஒன்று நீதிபதியின் அருகிலும், மற்றொன்று மேஜையின் முன்பாகவும் விழுந்ததாகவும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு.. இலங்கை தூதரை அழைத்து வன்மையாக கண்டித்த ஒன்றிய அரசு!
இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார் கருக்கா வினோதத்தை அங்கிருந்து உடனடியாக அப்புறப்படுத்தினர். அப்போது, ரவுடி கருக்கா வினோத் தன்னை வெளியே விடும்படி கோஷம் எழுப்பியதாகவும் கூறப்படுகிறது. இச்சம்பவம் தொடர்பாக போலீசார் கருக்கா வினோத்தை அழைத்துச் சென்று தீவிர விசாரணை நடத்தி வருவதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, ரவுடி கருக்கா வினோத் கடந்த அக்டோபர் 25ஆம் தேதி பாட்டிலில் பெட்ரோல் நிரப்பி அதனைப் பற்ற வைத்து ஆளுநர் மாளிகையின் முகப்பு வாயிலில் வீசினார். அதையடுத்து அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த காவலர்கள் கருக்கா வினோத்தைக் கைது செய்து, கிண்டி காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தினர்.
அதில், கருக்கா வினோத் தமிழக பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் கடந்த 2022ஆம் ஆண்டு பெட்ரோல் குண்டு வீசி சிறை சென்றுள்ளதும், ஓராண்டாகச் சிறையில் இருந்த நிலையில், விடுதலை செய்ய ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை. அதன் காரணமாக ஆத்திரத்தில் தற்போது ஆளுநர் மாளிகையின் மீது பெட்ரோல் குண்டு வீசியதாக வாக்குமூலத்தில் தெரிவித்ததாகக் கூறப்பட்டது.
அதை அடுத்து இவர் மீது வெடிபொருள் தடைச்சட்டம், பொதுச் சொத்துக்கு சேதம் விளைவித்தல் உள்ளிட்ட ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர். மேலும், கடந்த ஆண்டு நவம்பர் 14ஆம் தேதி ரவுடி கருக்கா வினோத் மீது கூட்டுச்சதி உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ், என்ஐஏ வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தது குறிப்பிடத்தக்கது.