டெல்லி: 2025-26 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டில், தமிழ்நாட்டில் உள்ள ரயில் உள்கட்டமைப்பை மேம்படுத்த ரூ.6,626 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
நடப்பாண்டிற்கான மத்திய பட்ஜெட்டை பிப்ரவரி 1ஆம் தேதி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். அதில், தமிழ்நாட்டிற்கு ரயில்வே, மெட்ரோ உள்ளிட்ட எவ்வித நிதியும் ஒதுக்கப்படவில்லை என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வியெழுப்பினார். அதனைத் தொடர்ந்து, அதிமுக உள்ளிட்ட பல அரசியல் தலைவர்களும் கண்டனம் தெரிவித்தனர்.
இந்த நிலையில், நேற்று (பிப்.3) மத்திய பட்ஜெட்டில் ரயில்வே துறைக்கு மாநில வாரியாக மேற்கொள்ளப்படும் திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி குறித்து மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
தமிழ்நாட்டிற்கு ரூ.ரூ.6,626 கோடி நிதி ஒதுக்கீடு:
அப்போது பேசிய அவர், "மத்திய பட்ஜெட் 2025-26-ல் தமிழ்நாட்டில் உள்ள ரயில் நிலையங்களின் உட்கட்டமைப்பை மேம்படுத்த ரூ.6,626 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 2014ஆம் ஆண்டில் இருந்து 1,303 கிலோமீட்டர் நீளத்திற்கு புதிய ரயில் பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. இது ஒட்டுமொத்த இலங்கை நாட்டில் உள்ள ரயில் பாதை அளவிற்கு நிகரானது" எனத் தெரிவித்தார்.
அதாவது, தமிழக வளர்ச்சி திட்டங்களுக்காகவும் சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய நிதிநிலை அறிக்கையில் ரூபாய் 6,626 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக்காலத்தில் ரயில்வே திட்டத்திற்காக 2007 - 2014ஆம் ஆண்டில் ரூ.879 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால், தற்போது, ரூ.6,626 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது, கிட்டத்தட்ட 7.5 சதவீதம் அதிகமாகும். அதாவது ரூ.654 கோடி அதிகம்.
இதையும் படிங்க:'மதுரை, ராமேஸ்வரம் ரயில் நிலையத்தின் மறு சீரமைப்பு பணிகள் தீவிரம்' - மதுரை கோட்டம்
பிற மாநிலங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி:
அதேபோல, 2025-26 பட்ஜெட்டில் ரயில்வே உட்கட்டமைப்பு மேம்பாட்டிற்காக அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ், கேரளம் மாநிலத்திற்கு ரூ.3,402 கோடியும், கர்நாடகா மாநிலத்திற்கு ரூ.7,564 கோடியும், தெலங்கானா மாநிலத்திற்கு ரூ.5,337 கோடியும், ஆந்திரப் பிரதேச மாநிலத்திற்கு ரூ.9,417 கோடியும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
மேலும், ராஜஸ்தான் மாநிலத்திற்கு ரூ.9,960 கோடியும், மகாராஷ்டிரா மாநிலத்திற்கு ரூ.23,778 கோடியும், குஜராத் மாநிலத்திற்கு ரூ.17,155 கோடியும், பஞ்சாப் மாநிலத்துக்கு ரூ.5,421, ஹரியானா மாநிலத்திற்கு ரூ.3,416 கோடியும், பீகார் மாநிலத்திற்கு ரூ.10,066 கோடியும், மேற்கு வங்கத்திற்கு ரூ.13,955 கோடியும், ஒடிஷா மாநிலத்திற்கு ரூ.10,599 கோடியும், உத்தரகாண்ட் மாநிலத்திற்கு ரூ.4,641 கோடியும், மத்தியப் பிரதேசத்திற்கு ரூ.14,745 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.