தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

"இது மத்திய பட்ஜெட் அல்ல; நிதீஷ் -நாயுடு பட்ஜெட்" : நாடாளுமன்றத்தில் துரை வைகோ விமர்சனம் - durai vaiko Speech in lok sabha - DURAI VAIKO SPEECH IN LOK SABHA

மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடு மட்டுமின்றி, நாட்டின் ஏழைகள், இளைஞர்கள், விவசாயிகள் மற்றும் பெண்களும் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக குற்றசாட்டியுள்ள மதிமுக எம்.பி. துரை வைகோ, இது 'நிதீஷ் -நாயுடு பட்ஜெட்' என்று விமர்சித்துள்ளார்.

மக்களவையில் உரையாற்றும்  துரை வைகோ
மக்களவையில் உரையாற்றும் துரை வைகோ (Credit - Sansad TV)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 26, 2024, 5:25 PM IST

புதுடெல்லி: நடப்பு 2024 -25 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் நாடாளுமன்றத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை (ஜூலை 23) தாக்கல் செய்யப்பட்டது. அதைதொடர்ந்து பட்ஜெட் மீதான விவாதத்தில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்கள் பங்கெடுத்து பேசி வருகின்றனர். நாடாளுமன்ற மக்களவையில் பட்ஜெட் மீதான விவாதத்தில் மதிமுகவின் திருச்சி தொகுதி எம்.பி. துரை வைகோ இன்று பேசினார்.

அப்போது அவர், "நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 8.8 சதவீதம் பங்களிப்பும், நாட்டின் ஒட்டுமொத்த ஏற்றுமதியில் 10 சதவீதம் பங்களிப்பும் அளித்துவரும் போதிலும், மத்திய பட்ஜெட்டில் எனது மாநிலமான தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டுள்ளது. நாட்டின் மொத்த மக்கள்தொகையில் 6 சதவீதம் பங்களிப்பை கொண்டுள்ள தமிழ்நாட்டுக்கான, மத்திய அரசின் வரி பங்கீடு 4 சதவீதம் அளவுக்கு குறைந்துள்ளது.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுவரும் புறநகர் மற்றும் மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு மொத்தம் 24,932 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுவதாக மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. ஆனால் இவற்றில், சென்னையில் நடைபெற்றுவரும் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்துக்கு நிதி ஏதும் அறிவிக்கப்படாதது மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது.

இத்திட்டத்தின் மொத்த மதிப்பீட்டு தொகையான 63 ஆயிரம் ரூபாய் கோடியில், தமிழக அரசு கடும் நிதி நெருக்கடியிலும் இதுவரை 21 ஆயிரம் கோடி ரூபாயை ஒதுக்கி உள்ளது. இதேபோன்று மிகவும் ஆவலோடு எதிர்பார்க்கப்படும் கோவை மற்றும் மதுரை மெட்ரோ ரயில் திட்டங்கள் குறித்த அறிவிப்பும் மத்திய பட்ஜெட்டில் இடம்பெறவில்லை. மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு ஒரு பைசா கூட ஒதுக்கவில்லை. தமிழ்நாட்டில் ஒரு நாடாளுமன்றத் தொகுதியில் கூட பாஜக வெற்றி பெறவில்லை என்பதால் தான் மத்திய அரசு இப்படி நடந்து கொள்கிறதா?

துரை வைகோ உரை (Credit - ETV Bharat)

மேலும், மாநிலத்தின் மையப் பகுதியாக திகழும் திருச்சியில் மெட்ரோ ரயில் திட்டத்தின் தேவை உள்ளது. இதனை கருத்தில் கொண்டு இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறு அறிக்கை அளிக்கப்பட்டும், திட்டத்தை தொடங்குவது தொடர்பான எந்த அறிவிப்பும் பட்ஜெட்டில் இடம்பெறவில்லை. வெறுப்பு அரசியலுக்கு தமிழ்நாடு இடமளிக்கவில்லை என்பதால் மத்திய அரசு இப்படி செய்கிறதா?

கந்தர்வகோட்டை, புதுக்கோட்டை வழியாக, தஞ்சாவூரில் இருந்து மதுரைக்கு புதிய ரயில் பாதை அமைக்கப்பட வேண்டும் என்ற எங்களின் நீண்டநாள் கோரிக்கை குறித்தும் பட்ஜெட்டில் அறிவிப்பு ஏதும் இடம்பெறவில்லை. சென்னை மாநகர போக்குவரத்துக்கு நெரிசலை குறைப்பதற்கு முக்கிய தேவையான, தாம்பரம் - செங்கல்பட்டு இடையேயான விரைவு சாலைத் திட்டம் குறித்த அறிவிப்பும் பட்ஜெட்டில் இடம்பெறவில்லை.

மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடு மட்டும் புறக்கணிக்கப்படவில்லை. இந்த நாட்டின் விவசாயிகள், ஏழைகள், இளைஞர்கள் மற்றும் பெண்களின் நலனும் புறக்கணிக்கப்பட்டுள்ளது. நாட்டில் ஏழைகளுக்கும் பணக்காரர்களுக்கும் இடையேயான இடைவெளி நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது

மொத்தத்தில் இந்த பட்ஜெட் இந்த நாட்டின் ஏழைகள், விவசாயிகள், இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கான பட்ஜெட் அல்ல. மாறாக, தங்களது கூட்டணிக் கட்சிகளை திருப்திப்படுத்துவதன் மூலம் ஆட்சியை தக்கவைத்து கொள்வதற்கான பட்ஜெட்.அதாவது இது 'நிதீஷ் -நாயுடு பட்ஜெட்' என்று துரை வைகோ விமர்சித்து பேசினார்.

இதையும் படிங்க:"ராணுவத்திற்கு தேவையான சீர்திருத்தம் அக்னிபாத்...."- விஜய் திவாஸ் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி!

ABOUT THE AUTHOR

...view details