டெல்லி: அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியின் 10 ஆண்டுக்கால ஆட்சிக்கு முடிவு கட்டி, 26 ஆண்டுகளுக்குப் பின்னர் தலைநகரில் மீண்டும் ஆட்சியமைக்கிறது பாஜக. நாட்டின் தலைநகரை யார் ஆளப்போவது என சுமார் 11 நாட்களாக நீடித்த சஸ்பென்ஸுக்கு முற்றுப்புள்ளி வைத்து, முதல் முறை சட்டமன்ற உறுப்பினரான ரேகா குப்தாவை முதலமைச்சராக அறிவித்தது.
முன்னதாக, தங்களது கட்சியின் சட்டமன்ற தலைவரையும், டெல்லி முதலமைச்சரையும் தேர்ந்தெடுப்பதற்கான பாஜக எம்எல்ஏக்களின் ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் நேற்று (பிப்.19) நடைபெற்றது. பல மணிநேரம் நடைபெற்ற இந்த கூட்டம் இரவு 7 மணியளவில் நிறைவடைந்த நிலையில், டெல்லி சட்டமன்ற பாஜக தலைவராக ரேகா குப்தா தேர்ந்தெடுக்கப்பட்டதாகவும், டெல்லியின் முதலமைச்சராகவும் அவர் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து, அம்மாநில துணை நிலை ஆளுநர் வினய் குமார் சக்ஸேனாவை நேரில் சந்தித்த ரேகா குப்தா, ஆட்சியமைக்க உரிமை கோரினார்.
சமீபத்தில் நடைபெற்ற டெல்லி சட்டமன்றத் தேர்தலில் ஷாலிமார் பாக் தொகுதியில் ஆம் ஆத்மி வேட்பாளர் பந்தனா குமாரியை எதிர்த்துப் போட்டியிட்ட ரேகா குப்தா, சுமார் 29 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
டெல்லியில் ஒன்பதாவது முதலமைச்சராக, பாஜகவின் ரேகா குப்தா இன்று பதவியேற்றார். இவர் அம்மாநிலத்தின் 4வது பெண் முதலமைச்சர் ஆவார். மேலும், அவர் தலைமையிலான அமைச்சரவையில் ஆறு பேர் அமைச்சர்களாகப் பொறுப்பேற்பார்கள் என பாஜக அறிவித்திருந்தது.
இந்த நிலையில், ரேகா குப்தாவுடன் சேர்த்து ஆறு அமைச்சர்களுக்கு இன்று, டெல்லியின் துணை நிலை ஆளுநர் வினய் குமார் சக்சேனா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். அந்த வகையில், இன்று பதவியேற்ற அமைச்சர்களின் பெயர் பட்டியல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: டெல்லி முதலமைச்சராக இன்று பதவியேற்கிறார் ரேகா குப்தா.. பிரதமர் மோடி பங்கேற்பு!
இன்று காலை 11 மணியளவில் நடைபெறும் இந்நிகழ்வில், பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, மத்திய அமைச்சர்கள், பாஜக ஆளும் மாநில முதலமைச்சர்கள் மற்றும் கட்சி பிரமுகர்கள் என 50 ஆயிரம் பேர் பங்கேற்க உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், டெல்லியில் உள்ள ராம்லீலா மைதானத்தில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசாரும், தேசிய பாதுகாப்புப் படை வீரர்களும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜிரிவாலை எதிர்த்துப் போட்டியிட்டு, வெற்றி பெற்ற பர்வேஷ் வர்மா அமைச்சராகவும் பதவியேற்க உள்ள நிலையில், அவருக்குத் துணை முதலமைச்சர் பதவி வழங்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இன்று பதவியேற்ற உள்ள பாஜக அமைச்சர்கள் விவரம்:
- ஆஷிஷ் சூட்
- மஞ்சிந்தர் சிங் சிர்ஷா
- ரவீந்தர் இந்திரராஜ் சிங்
- கபில் மிஸ்ரா
- பங்கஜ் குமார் சிங்