மதுரை: திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தை வெளியே இருந்து வரும் சில அமைப்புகளே அரசியலாக்கி வருகின்றன. பாபர் மசூதி பிரச்னையின் போது வழிபாட்டுத் தலங்கள் தொடர்பாக பிரச்னை ஏற்படாமல் தடுக்கும் வகையில் 1991-இல் வழிபாட்டு தலங்கள் பாதுகாப்புச் சட்டம் கொண்டு வரப்பட்டது. இதன்படி, இந்திய சுதந்திரம் அடைந்த 1947-இல் மத வழிபாட்டுத் தலங்கள் எப்படி இருந்ததோ அப்படியே அதை ஏற்றுக் கொண்டு வழிபாட்டுத் தலங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் எனவும் உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி ஹரி பரந்தாமன் தெரிவித்தார்.
மதுரை மத நல்லிணக்க வழக்குரைஞர்கள் சங்கம் சார்பில், திருப்பரங்குன்றம் தீர்ப்புகள் சொல்வதென்ன? வரலாற்று உண்மை என்ன? என்ற தலைப்பில் சட்ட கருத்தரங்கம் நடைபெற்றது. மதுரை கே.கே.நகரில் உள்ள கிருஷ்ணய்யர் சமுதாயக்கூடத்தில் நடைபெற்ற இந்த கருத்தரங்கில், உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி ஹரி பரந்தாமன் பங்கேற்றார். மேலும், வழக்குரைஞர் வாஞ்சிநாதன் தொல்லியல் அறிஞர் சொ.சாந்தலிங்கம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
முன்னதாக செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி ஹரி பரந்தாமன், "திருப்பரங்குன்றம் தொடர்பாக பல்வேறு சச்சரவுகள் ஏற்பட்டு வருகின்றன. ஆனால், நீதிமன்ற தீர்ப்புகள் மிகவும் தெளிவாக உள்ளன. இதில், ஆங்கிலேயேர் ஆட்சியின் போது திருப்பரங்குன்றம் கோயில் நிர்வாகத்திற்கும், அப்போதைய ஆங்கிலேயே அரசுக்கும் இடையே ஏற்பட்ட பிரச்னை தொடர்பாக, கோயில் நிர்வாகம் சார்பில், மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் 1917-ல் வழக்குத் தொடரப்பட்டது.
பள்ளிவாசலுக்குச் சொந்தமான சொத்துகள்:
வழக்கை விசாரித்த நீதிபதி ராம் அய்யர், 1923 ஆகஸ்ட் 25ஆம் தேதி வழங்கிய தீர்ப்பில், கோயில் மேல் உள்ள சிக்கந்தர் தர்ஹா, நெல்லித்தோப்பு மண்டபம், கொடிமரம், படிக்கட்டு பாதை ஆகியவை பள்ளிவாசல் நிர்வாகத்துக்கு சொந்தமானது என்று தீர்ப்பளித்தார். இந்த தீர்ப்புக்கு எதிராக உயர்நீதிமன்றம் சென்ற போது, உயர்நீதிமன்றம் மாவட்ட நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை ரத்து செய்தது.
இதற்கு எதிராக லண்டனில் இயங்கி வந்த அப்போதைய உச்சநீதிமன்றமான பிரிவு கவுன்சிலில் முறையீடு செய்யப்பட்டது. முறையீட்டை விசாரித்த ஐந்து நீதிபதிகள் அடங்கிய அமர்வு, 1931-இல் வழங்கிய தீர்ப்பில், உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்து, மதுரை மாவட்ட நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்தது. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பில், பள்ளிவாசலுக்குச் சொந்தமான சொத்துகள் மிகத்தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளன.
மேலும், ஆங்கிலேயர் ஆட்சியின் போது திருப்பரங்குன்றம் மலையை குவாரியாக மாற்ற இருமுறை நடவடிக்கை எடுக்கப்பட்டு எதிர்ப்பால் கைவிடப்பட்டது. 1815 ஆம் ஆண்டில் அரசின் மானியப் பதிவேட்டில், திருப்பரங்குன்றம் மலைமீதுள்ள சிக்கந்தர் தர்ஹா பராமரிப்புக்காக தனக்கன்குளம் கிராமம் எழுதி வைக்கப்பட்டிருப்பது பதிவாகியுள்ளது. அந்த பதிவேட்டில் சிக்கந்தர் மலை, கந்தர் மலை என்பதும் பதிவாகியுள்ளது.
வழிபாட்டுத் தலங்கள் பாதுகாப்புச்சட்டத்தை அமல்படுத்த வேண்டும்:
தற்போது, மதுரை மக்களோ அல்லது திருப்பரங்குன்றம் மக்களோ இந்த பிரச்னையை எழுப்பவில்லை. வெளியே இருந்து வரும் சில அமைப்புகளை இதை அரசியலாக்கி வருகின்றன. பாபர் மசூதி பிரச்னையின் போது வழிபாட்டுத் தலங்கள் தொடர்பாக பிரச்னை ஏற்படாமல் தடுக்கும் வகையில், 1991-இல் வழிபாட்டு தலங்கள் பாதுகாப்புச்சட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த சட்டத்தின்படி, இந்திய சுதந்திரம் அடைந்த 1947-இல் மத வழிபாட்டுத் தலங்கள் எப்படி இருந்ததோ அப்படியே அதை ஏற்றுக்கொண்டு வழிபாட்டுத் தலங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
தற்போது திருப்பரங்குன்றம் போல நாடு முழுவதும் 10-க்கும் மேற்பட்ட வழிபாட்டுத் தலங்கள் தொடர்பான பிரச்சனை எழுப்பப்பட்டுள்ளது. மதரீதியாக மக்கள் மோதிக்கொண்டால், குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாமின் கனவான 'இந்தியா வல்லரசு நாடாக ஆவது' தடுக்கப்படும். எனவே, நாடு முழுவதும் வழிபாட்டுத் தலங்கள் பாதுகாப்புச்சட்டம் 1991-ஐ உறுதியாக அமல்படுத்த வேண்டும்" எனத் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து பேசிய தொல்லியல் அறிஞர் சொ.சாந்தலிங்கம், "திருப்பரங்குன்றம் மலையில் முதன் முதலாக ஆதிக்கம் செலுத்தியவர்கள் சைவர்கள். சமணக் கோயிலில் அத்துமீறி ஆக்கிரமிப்புச் செய்து, அதனைச் சைவக் கோயிலாக மாற்றியதை திருப்பரங்குன்றத்திலுள்ள கல்வெட்டு கூறுகிறது. கேட்பதற்கு ஆளில்லாத மிகச் சிறுபான்மைச் சமூகமாக மாறிவிட்ட சமணர்களின் கோயில் கடந்த 13-ஆம் நூற்றாண்டில் சைவர்களால் கபளீகரம் செய்யப்பட்டது.
இதையும் படிங்க: மாநில அரசுகளின் அதிகாரம் பறிப்பு?.. சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்க புதிய விதிமுறை!
இதற்கு அடுத்த 100 ஆண்டுகளில் தான் மதுரையில் சுல்தானியர் ஆட்சி தொடங்கியது. 13-ஆம் நூற்றாண்டின் இறுதிக் காலத்தில் அண்ணன்-தம்பிகளுக்கு இடையே பாண்டிய நாட்டில் யார் அரசாட்சி செய்வது என்ற குழப்பம் ஏற்பட்டது. அப்போது சுந்தரபாண்டியன் பட்டத்து ராணியின் புதல்வனாக ஆட்சிப் பொறுப்பேற்கத் தகுதி பெற்றிருந்தான். அரசனானான் குலசேகர பாண்டியனின் மற்றொரு மனைவி மகன் வீரபாண்டியன்.
உள்ளதை உள்ளவாறே பாதுகாக்க வேண்டும்:
ஆனால், வீரபாண்டியனுக்கு அரசன் பட்டம் சூட்டியதால், கொதித்தெழுந்த சுந்தரபாண்டியன், கி.பி 1311இல் மாலிக்காபூரை பாண்டிய நாட்டிற்குள் படையெடுத்து வர ஏற்பாடு செய்கிறான். அதற்குப் பிறகு தான் 40 ஆண்டுக் காலம் மதுரையில் சுல்தான்களின் ஆட்சி நடைபெறுகிறது. அவர்களில் 10 பேர் அரசாட்சி செய்கிறார்கள். அவர்களில் கடைசியாக ஆண்டவர் தான் சிக்கந்தர் ஷா. ஆகையால் திருப்பரங்குன்றம் மலையில் அவர் உயிர் நீத்த இடத்தில் தான் பின்னர் தர்ஹா கட்டப்படுகிறது.
ஆகவே, இன்றைய நிலையில் நாட்டு விடுதலைக்குப் பிறகு வந்த சட்டத்தின் அடிப்படையிலும், தொல்லியல் சட்டத்தின் அடிப்படையிலும் திருப்பரங்குன்றம் மலையைச் சுற்றி 300 மீட்டர் தூரம் யாரும், எந்தவித ஆக்கிரமிப்பும் செய்ய முடியாது. உள்ளதை உள்ளவாறே பாதுகாக்க வேண்டும் என்பதையே மத்திய அரசின் தொல்லியல் துறை சட்டம் கூறுகிறது. அதை நாம் எல்லோரும் பின்பற்றினாலே இன்றைய குழப்பங்களுக்குத் தீர்வாக அமையும்" எனத் தெரிவித்தார்.