டெல்லி: இந்தியாவின் தலைநகர் டெல்லியின் புதிய முதலமைச்சராக பாஜகவின் ரேகா குப்தா (Rekha Gupta) பதவியேற்றார். அவருக்கு அம்மாநிலத் துணை நிலை ஆளுநர் வினய் குமார் சக்சேனா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
டெல்லியில் உள்ள ராம்லீலா மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த பதவியேற்பு நிகழ்ச்சியில், பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா, உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட மத்திய அமைச்சர்களும், பாஜக மூத்த தலைவர்களும் என சுமார் 50 ஆயிரம் பேர் கலந்து கொண்டுள்ளனர். மேலு, பலத்த போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி, முதலமைச்சர் ரேகா குப்தாவுடன் இணைந்து கேபினட் அமைச்சர்களாக 6 பேர் பதவியேற்கின்றனர். அதாவது சட்டப் பேரவைத் தேர்தலில் டெல்லி முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை தோற்கடித்த, பர்வேஷ் வர்மா அமைச்சராக பதவியேற்றார். அவருக்கு துணை நிலை ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். மேலும், பர்வேஷ் வர்மாவுக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கப்படுகிறது.
முதலமைச்சரைத் தவிர்த்து, ஆஷிஷ் சூட், மஞ்சிந்தர் சிங் சிர்ஷா, ரவீந்தர் இந்திரராஜ் சிங், கபில் மிஸ்ரா, மஞ்சிந்தர் சிங் சிர்சா மற்றும் பங்கஜ் குமார் சிங் ஆகிய ஆறு அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டுள்ளனர். தற்போது டெல்லியில் பதவியேற்றுக் கொண்ட ரேகா குப்தாவிற்கு, பாஜக தலைவர்கள், பதவி விலகும் டெல்லி முதலமைச்சர் அதிஷி மற்றும் முன்னாள் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் என அரசியல் தலைவர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இதுகுறித்து பாஜக அமைச்சராக பதவியேற்ற பர்வேஷ் செய்தியாளர்களிடம் கூறுகையில், "டெல்லியில் எங்களுக்கு மிகப்பெரிய பொறுப்பு உள்ளது. டெல்லி மக்கள் எங்களுக்கு அன்பையும், ஆசீர்வாதத்தையும் அளித்துள்ளனர். சுமார் 27 ஆண்டுகளுக்குப் பிறகு, பாஜக இன்று டெல்லியில் அரசாங்கத்தை அமைக்கப் போகிறது. மக்கள் நம்பிக்கையுடன் பிரதமர் மோடிக்கு நன்றி கூறுகிறேன்," எனத் தெரிவித்தார்.
பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற்ற டெல்லி சட்டமன்றத் தேர்தலில் ஷாலிமார் பாக் தொகுதியில் ஆம் ஆத்மி வேட்பாளர் பந்தனா குமாரியை எதிர்த்துப் போட்டியிட்ட ரேகா குப்தா, சுமார் 29 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். மேலும், நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் மொத்தம் 70 இடங்களில் பாஜக 48 இடங்களையும், ஆம் ஆத்மி 22 இடங்களையும் வென்ற நிலையில், காங்கிரஸ் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பாஜகவின் சட்டமன்ற தலைவரையும், டெல்லி முதலமைச்சரையும் தேர்ந்தெடுப்பதற்கான பாஜக எம்எல்ஏக்களின் ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் நேற்று (பிப்.19) நடைபெற்றது. அதில், ரேகா குப்தா முதலமைச்சராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்த வகையில், ரேகா குப்தா டெல்லியில் நான்காவது பெண் முதலமைச்சர் ஆவார். மேலும், முதல் முறை சட்டமன்ற உறுப்பினரான ரேகா குப்தாவை முதலமைச்சராக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
இவர் தேர்தலுக்கு முன்னதாக நடைபெற்ற பிரச்சாரத்தில் பெண் வாக்காளர்களை கவரும் வகையில் பண ஊக்கத்தொகை முதல் நலத்திட்டங்கள் வரை பல்வேறு வாக்குறுதிகளை அளித்திருந்தார். குறிப்பாக, மாதம்தோறும் பெண்களுக்கு ரூ.2,500 வழங்க்ப்படும் என தெரிவித்திருந்தார். இந்த நிலையில், முதலமைச்சராக பதவியேற்றவுடன் அந்த திட்டம் தொடர்பாக மேடையிலேயே அறிவிப்பை தெரிவித்துள்ளார்.