செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரை அடுத்துள்ள ஆலத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார் (45). இவர் விவசாய கூலித் தொழிலாளராக வேலை செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று (பிப். 20) திருப்போரூரில் உள்ள தனியார் பள்ளியில் படிக்கும் தனது மகளை அழைத்து வருவதற்காக ஆலத்தூர் பகுதியில் இருந்து இருசக்கர வாகனத்தில் ஓஎம்ஆர் சாலையில் திருப்போரூர் நோக்கிச் சென்றுள்ளார்.
அப்போது, தண்டலம் வழியாக கல்லூரி மாணவர்கள் காரில் வந்து கொண்டிருந்தனர். இந்நிலையில் சாலையின் வளைவில் கார் கட்டுப்பாட்டை இழந்த நிலையில் காருக்கு முன் சென்று கொண்டிருந்த சுரேஷ்குமாரின் இருசக்கர வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளாகி உள்ளது.
அந்த விபத்தின் போது கார் சாலை அருகே இருந்த மின் கம்பத்தை உடைத்துக் கொண்டு விளை நிலத்தில் விழுந்து கவிழ்ந்த நிலையில் இருசக்கர வாகனத்தில் வந்த சுரேஷ் குமார் உடல் நசுங்கி 100 அடி தூரத்திற்கு அப்பால் தூக்கி வீசப்பட்டார். இதில் சுரேஷ்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மேலும், காரை ஓட்டி வந்த கல்லூரி மாணவி மற்றும் காரில் உடன் இருந்த ஹேமலதா, சுவேதா, சவிதா, ஷாகித், தனுஷ் ஆகிய 6 பேரும் பலத்த காயமடைந்த நிலையில் கேளம்பாக்கத்தில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து, திருப்போரூர் போலீசார் மற்றும் விபத்துக்குள்ளான சுரேஷ்குமாரின் உறவினர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
அங்கு உயிரிழந்த சுரேஷ்குமாரின் உடலை உறவினர்கள் கட்டி அணைத்து கண்ணீர் விட்ட நிலையில் ஓ.எம்.ஆர். சாலையின் நடுவே சடலத்தை வைத்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, திருப்போரூர் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட உறவினர்களிடம் சுமூக பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து போராட்டக்காரர்கள் சாலை மறியல் போராட்டத்தைக் கைவிட்டனர்.
பின், உயிரிழந்த சுரேஷ்குமாரின் சடலத்தை போலீசார் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காகச் செங்கல்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து மாணவர்கள் மீது அஜாக்கிரதையாக வாகனம் ஓட்டுதல், பிறருக்குக் காயம் ஏற்படுத்துதல், உயிர்ச் சேதம் ஏற்படுத்துதல் என மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதையடுத்து மாணவர்களிடம் முதற்கட்டமாக நடத்தப்பட்ட விசாரணையில் காரில் வந்த மாணவர்கள் ஆறு பேரும் படூரில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் உணவுத் தொழில் நுட்ப பிரிவில் இரண்டாம் ஆண்டு படித்து வருவது தெரியவந்துள்ளது. மேலும் ஆறு பேரும் கல்லூரி முடிந்து மாமல்லபுரம் சென்று ஓட்டலில் சாப்பிட்டு விட்டுத் திரும்பிய போது சாலையில் சென்ற வாகனங்களுடன் போட்டிப் போட்டுக் கொண்டு அதிவேகமாக வந்ததால் தான் விபத்து ஏற்பட்டதா? என்ற கோணத்திலும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: மகாராஷ்டிரா டூ வியாசர்பாடி! கொள்ளை அடிப்பதற்காகச் சென்னை வந்த பலே திருடர்கள் - சிக்கியது எப்படி? -
ஏற்கனவே, கடந்த 2 மாதத்திற்கு முன்பு பண்டிதமோடு கிராமத்தில் சாலை ஓரமாக அமர்ந்து மாடு மேய்த்துக் கொண்டிருந்த முதியவர்கள் மீது கல்லூரி மாணவர்கள் கார் மோதி விபத்துக்குள்ளானதில் 5 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். அதே போல், நேற்றும் மற்றொரு சம்பவம் நடந்துள்ளது.