டெல்லி:நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் தேர்தலுக்கு முந்தைய கால கட்டத்திற்கான அரசின் செலவீனங்களுக்கான இடைக்கால பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 1ஆம் தேதி தாக்கல் செய்ய உள்ளார். தேர்தலை எதிர்நோக்கி பட்ஜெட்டில் முக்கியமான சலுகைகள் இடம்பெறலாம் என்பதால் பட்ஜெட் மீதான எதிர்பார்ப்பு அனைத்து தரப்பினர் மத்தியிலும் காணப்படுகிறது.
ஒரு நாட்டின் பொருளாதார நிலை நல்ல நிலையில் இருப்பது நிதி உபரி ஆக இருக்கும் போது தெரிய வருகிறது. அதுவே நிதி பற்றாக்குறை ஏற்படும் போது அந்த நாட்டின் நிதி நிலை தெரிய வருகிறது. நிதி பற்றாக்குறை அதிகமாகும் போது நாட்டின் நிதிநிலை மோசமான கட்டத்தில் இருப்பது தெரிய வருகிறது.
2021 - 2022ஆம் நிதியாண்டில் பட்ஜெட் தரவுகளின் படி மத்திய அரசின் மொத்த செலவுகள் ரூ.37.94 லட்சம் கோடி. அந்த ஆண்டு மொத்த செலவீனத்திற்கும் வருவாய்க்கும் இடையிலான பற்றாக்குறையை சமாளிப்பதற்காக ரூ.15.84 லட்சம் கோடிக்கு மேல் கடன் வாங்கப்பட்டிருந்தது. அரசின் செலவீனத்தில் 42 சதவீதம் கடன் மூலம் நிவர்த்தி செய்யப்பட்டிருந்தது. இது நாட்டின் மொத்த உற்பத்தியில் (GDP) 6.7 சதவீதம் ஆகும்.