சென்னை: தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கத்தின் சார்பாக ஆண்டுதோறும் புத்தகக் கண்காட்சி சென்னையில் நடத்தப்பட்டு வருகின்றது. அதன் ஒரு பகுதியாக, நடப்பு ஆண்டில், 48வது புத்தகக் கண்காட்சி சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ (YMCA Grounds) மைதானத்தில் கடந்த டிசம்பர் 27 ஆம் தேதி, வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதனை, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
டிசம்பர் 27 ஆம் தேதி தொடங்கிய புத்தகக் கண்காட்சி, மொத்தம் 17 நாட்கள் நடைபெற்று நேற்றுடன் (ஜனவரி 12) நிறைவு பெற்றுள்ளது. நிறைவு நிகழ்ச்சியில் உச்ச நீதிமன்ற நீதிபதி ஆர்.மகாதேவன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, புத்தகக் கண்காட்சி நடைபெறுவதற்கு உறுதுணையாக இருந்து உதவி புரிந்த கொடையாளர்கள், நிறுவனங்களை பாராட்டி கெளரவித்துள்ளார்.
ரூ.20 கோடிக்கு புத்தகங்கள் விற்பனை:
புத்தக கண்காட்சி நிறைவு நிகழ்ச்சியில் பதிப்பு துறையில் 25 மற்றும் 50 ஆண்டுகள் சேவை புரிந்த 14 பேருக்கு சிறப்பு விருதுகள் வழங்கப்பட்டுள்ளது. 17 நாட்கள் நடைபெற்ற இந்த புத்தக கண்காட்சியில் மொத்தம் 20 லட்சம் வாசகர்கள் வருகை புரிந்து பார்வையிட்டுள்ளதாகவும், ரூ.20 கோடி மதிப்பிலான புத்தகங்கள் விற்பனை நடைபெற்றதாகவும் பபாசி தெரிவித்துள்ளது.
இதனைத்தொடர்ந்து வாசகர்களும், பதிப்பகத்தின் நிர்வாகிகளும் ஈடிவி பாரத் தமிழ் ஊடகத்திற்கு சிறப்பு பேட்டி அளித்துள்ளனர். அதில், திருநங்கை பதிப்பகத்தை சேர்ந்த திருநங்கை ப்ரீதிஷா பேசுகையில், " புத்தகக் கண்காட்சியில் திருநங்கை பதிப்பகம் கடந்த 3 வருடங்களாக செயல்பட்டு வருகிறது. திருநங்கைகள் சேர்ந்து ஒரு பதிப்பகத்தை நடத்துவது என்பது சாதாரண செயல் அல்ல. திருநங்கைகள் எழுதிய புத்தகங்களை இங்கே வெளியிட்டிருப்பது மிகப்பெரிய சாதனையாகும்.
திருநங்கைகள் குறித்த பல்வேறு கருத்துக்கள் இந்த சமூகத்தில் பேசப்பட்டு வருகிறது. சிக்னல், சாலைகள், ரயில் நிலையங்களில் நிற்கிறார்கள், தவறான தொழில் செய்கிறார்கள் என்றெல்லாம் கூறுகிறார்கள். கடந்த சில வருடங்களாக திருநங்கைகள் முன்னேறி வருகின்றனர். பல துறைகளில், குறிப்பாக எழுத்தாளர் துறையில் தற்போது முன்னேறி வருகின்றனர். இந்த பதிப்பகத்தில் நிப்பான், பஸ்தி, பாலஸ்தீன பறவை ஆகிய புத்தகங்கள் எங்கள் பதிப்பகத்தில் நன்றாக விற்பனையாகியிருக்கிறது" இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: உலகின் மிகப்பெரிய ஆன்மீக நிகழ்வு மகா கும்பமேளா 2025 தொடக்கம்...பக்தர்களுக்கு பிரதமரின் சிறப்பு தின செய்தி!
அதனைத்தொடர்ந்து, வாசகர் தினேஷ் பாபு கூறுகையில், "இந்த புத்தக கண்காட்சிக்கு வருகை தந்தது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.அனைத்து விதமான புத்தகங்களும் இங்கே கிடைக்கிறது. தற்போது, தமிழகம் முற்றிலும் வளர்ச்சியை நோக்கி செல்கின்றது. பல்வேறு நிகழ்ச்சிகள் அடுத்தடுத்து நடக்க இருக்கிறது" என்றார்.
பின்னர் எழுத்தாளர் கரன்கார்கி பேசுகையில், “இந்த புத்தகக்கண்காட்சியை நான் ஒரு திருவிழாவாக பார்க்கிறேன். 30 வருடங்களாக நான் புத்தக கண்காட்சிக்கு வருகிறேன். தற்போது புத்தக வாசகர்கள் குறைந்துவிட்டார்கள் என்று பலரும் கூறுகின்றனர். ஆனால், அவ்வாறு இல்லை. தற்போது இலக்கிய புத்தகங்கள் விற்பனை ஆகிறது. புத்தக வரிசைகளானது திட்டமிட்ட வடிவமாக இல்லை.
ஆதிதிராவிடர் நலத்துறை என்ற பதிப்பகம் உள்ளது, அதனை தனியாக வைத்திருக்கின்றனர். புத்தர் குறிப்பிட்ட நூல்கள் இருக்கின்றன, அவற்றையும் தனியாக வைத்துள்லனர். முகியமான புத்தகங்களையும், பதிப்பகத்தையும் மையத்தில் வைக்க வேண்டும். இது இளைஞர்களுக்கு ஊக்கமளிக்கும்" இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.