புதுடெல்லி: டெல்லி மக்கள் மத்தியில் முக்கிய பேசு பொருளாக இருக்கும் குடிநீர், மின்சாரம், சுகாதாரம், கல்வி ஆகியவற்றில் கெஜ்ரிவால் அரசு மேற்கொண்ட திட்டங்களை சொல்லி ஆம் ஆத்மி வாக்கு கேட்கிறது.
டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் களத்தில் பாஜக, ஆம் ஆத்மி ஆகிய கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. தேசிய தலைநகரின் தேர்தல் யுத்தத்தில் பாஜக, ஆம் ஆத்மி கட்சிகள் முறையே மோடி, கெஜ்ரிவால் ஆகியோர் செய்த சாதனைகளை பட்டியலிடுகின்றன. டெல்லியில் வரும் பிப்ரவரி 5ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தேசிய தலைநகரான டெல்லி, ஆம் ஆத்மிக்கு வலுவான மாநிலமாக இருந்து வருகிறது. எனவே அந்த கட்சியை எதிர்கொள்ள பாஜக பன்முக உத்திகளை வகுத்து வருகிறது
ஆம்ஆத்மி, பாஜக இடையேயான டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் களம் என்பது அரசின் கொள்கை சார்ந்ததாகவோ, வளர்ச்சி விஷயங்கள் தொடர்பானதாகவோ இல்லை. டெல்லியில் பாஜகவைப் பொறுத்தவரை பிரதமர் நரேந்திர மோடியின் சாதனைகளையே முன்னிறுத்த திட்டமிட்டுள்ளனர். இன்னொரு புறம் ஆம் ஆத்மி கட்சியானது முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலையே தமது முகமாக முன்னிறுத்தி வருகிறது.
டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் கட்சி வெற்றி பெறுவதை உறுதி செய்யும் வகையில் வழக்கம்போல வேறு எந்த ஒருவரையும் முன்னிறுத்துவதை விடவும், பிரதமர் மோடியின் அந்தஸ்தையே முன்னிறுத்துகின்றனர். மோடியின் தலைமையின் கீழ் 2014, 2019 ஆம் ஆண்டுகளில் மக்களவைத் தேர்தல்களில் வெற்ற பெற்றுள்ளனர். மோடியின் செல்வாக்கு நாடு முழுவதும் வலுவாக உள்ளது. அதே போல டெல்லியிலும் அவருக்கு பெரும் எண்ணிக்கையிலான ஆதரவாளர்கள் உள்ளனர்.
பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் பிரதமரின் ஆவாஸ் யோஜனா, ஆயுஸ்மான் பாரத் யோஜனா உள்ளிட்ட இதர திட்டங்களை டெல்லி மக்களுக்காக மத்திய அரசின் திட்டங்கள் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளன. பாஜகவின் டெல்லி மாநில பிரிவினர் மோடியின் செல்வாக்கு, மற்றும் அவரால் தொடங்கப்பட்ட திட்டங்களை நம்பி உள்ளனர்.
பாஜகவுக்கு முதல்வர் வேட்பாளர் இல்லை
டெல்லி தேர்தல் களத்தில் பாஜகவுக்கு முதலமைச்சர் வேட்பாளர் இல்லை என்பதை ஆம் ஆத்மி ஒரு குற்றச்சாட்டாகவே முன்னுறுத்தி வருகிறது. பாஜக மோடியின் முகத்தை மட்டும் வைத்து தேர்தல் பணியாற்றினால், நிச்சயம் தோல்வியடையும் என்றும் ஆம் ஆத்மி கூறுகிறது. அதே நேரத்தில் ஆளும் கட்சியானது அரவிந்த் கெஜ்ரிவால் அரசு மேற்கொண்ட கல்வி, சுகாதரம், மின்சாரம், குடிநீர் உள்ளிட்ட மக்களிடம் பேசு பொருளாக இருக்கும் துறைகளில் மேற்கொள்ளப்பட்ட சாதனைகளை வாக்காளர்களிடம் கூறி வருகின்றனர். மோடியின் முகத்தை முன்னிறுத்தி தேர்தலில் போட்டியிடும் பாஜக இந்த விஷயங்களில் ஆம் ஆத்மிக்கு எதிராக தங்கள் நிலையை எடுத்து வைக்க முடியாது. மோடி முகத்தை பாஜக முன்னிறுத்தும் நிலையில், முதலமைச்சர் பதவிக்கு உள்ளூர் வேட்பாளர் யாரையும் முன் நிறுத்த முடியவில்லை. பாஜகவின் உத்தியை கேள்வி எழுப்பவும், அந்த கட்சி மீது தாக்குதல் நடத்தவும் ஆம் ஆத்மிக்கு இது ஒரு பெரிய வாய்ப்பாகும்.
உள்ளூர் தொடர்புக்கான கெஜ்ரிவால் முகம்
அரவிந்த் கெஜ்ரிவால் தமது பதவி காலத்திலேயே ஏற்கனவே செல்வாக்கை உருவாக்கி இருக்கிறார். மக்களைப் பாதிக்கும் பொது பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதில் அவர் சிறப்பாக செயல்பட்டிருப்பதாக ஆம் ஆத்மி கூறுகிறது. கெஜ்ரிவாலின் எளிமை, நல்லவர் என்ற செல்வாக்கு என்பதை முன் வைத்து தங்கள் கட்சிக்கான ஆதரவை ஆம் ஆத்மி திரட்டுகிறது. இது குறித்து பேசிய ஆம் ஆத்மி கட்சி தலைவர்கள், அவரது நேர்மை, உறுதியான கொள்கைகள் அவரை நம்பிக்கையான தலைவராக உருவாக்கியிருக்கிறது. இது ஆம் ஆத்மி கட்சிக்கு ஒரு பெரும் சாதகம் என்று கூறுகின்றனர். குறிப்பாக முதலமைச்சரின் பங்களா விவகாரத்தில் பாஜக முன் வைக்கும் குற்றச்சாட்டுகள் குறித்து பாஜக, மோடி அரசு இரண்டையும் ஆம் ஆத்மி கட்சியினர் தகுதியில்லாத அரசு என்ற விமர்சனத்தை முன் வைக்கிகின்றனர். இதன் மூலம் டெல்லி மக்களுக்காக பாடுபடும் கட்சி ஆம் ஆத்மி மட்டும்தான் என்ற எண்ணத்தை மக்களிடம் அந்த கட்சி முன் வைக்கிறது.
இது குறித்து பேசிய அரசியல் ஆய்வாளர் மனோஜ் குமார் ஜா, "பாஜக பல சட்டப்பேரவைத் தேர்தல்களில் போட்டியிட்டுள்ளது. அப்போதெல்லாம் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்று கூறாமலேயே போட்டியிட்டு வென்றுள்ளது. ஒடிசா, சத்தீஸ்கர், ராஜஸ்தான் மாநிலங்களில் தேர்தலில் போட்டியிட்டபோது முதலமைச்சர் யார் என்பதை பாஜக சொல்லவில்லை. பிரதமர் மோடியை முன்னுறுத்தியே அந்த கட்சி வெற்றி பெற்றது. பாஜக அதே முறையைத்தான் டெல்லி தேர்தலிலும் மேற்கொள்கிறது. பாஜகவுக்கு டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவாலை எதிர்கொள்ளும் அளவுக்கு அப்படியான செல்வாக்கான தலைவர் இல்லை. ஒரு உள்ளூர் தலைவரை பாஜக முதலமைச்சர் வேட்பாளராக முன்னுறுத்தினால், போட்டி என்பது அந்த உள்ளூர் தலைவருக்கும் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் இடையேயான போட்டி என்பது போல மாறி விடும். அப்போது பாஜகவுக்கு அரசியல் ரீதியான இழப்பை ஏற்படுத்தும். அதே நேரத்தில் அரவிந்த் கெஜ்ரிவாலை விடவும் மோடியின் முகத்துக்கு மேலும் நம்பகத்தன்மை கிடைக்கும். ஆகவேதான் மோடியின் முகத்தை முன் வைத்து பாஜக தேர்தலை சந்திக்கிறது.
மோடி கெஜ்ரிவாலை விடவும் செல்வாக்கில் உயர்ந்தவர்
பிரதமர் நரேந்திர மோடியுடன் ஒப்பிடும்போது அரவிந்த் கெஜ்ரிவாலின் செல்வாக்கு என்பது வரம்புக்கு உட்பட்டதுதான். மோடி மிகவும் செல்வாக்குப் பெற்றவர். மோடியின் தேச, சர்வதேச அடையாளம் என்பது ஆம் ஆத்மி கட்சிக்கு சவாலாக இருக்கும். ஊழல், வாக்குறுதி மீறியது, பூர்வாஞ்சல்களை அவமானப்படுத்தியது, டெல்லியின் மோசமான நிலை, குடிநீர் பிரச்னை, சுற்றுச்சூழல் விவகாரம் ஆகியவற்றை முன் நிறுத்தி கெஜ்ரிவாலை தொடர்ச்சியாக விமர்சனம் செய்து வருகிறது.
தவிர பாஜகவும் டெல்லி மக்களுக்காக இலவச திட்டங்களை அறிவிக்கிறது. ஐஏஎன்ஸ் செய்தி நிறுவனத்தின் தகவலின்படி பாஜகவின் தேர்தல் அறிக்கையில் டெல்லியில் மக்களுக்கு 300 யூனிட் மின்சாரம் வரை இலவசமாக கொடுக்கலாம் என்றும், மத வழிபாட்டு இடங்களுக்கு 500 யூனிட் மின்சாரம் இலவசமாக கொடுக்கலாம் என்றும் அறிவிக்கப்பட உள்ளதாக தெரிகிறது. இது தவிர, லாட்லி பெஹ்னா யோஜனா போன்ற பெண்களுக்கான ஒரு சிறப்பு திட்டமும் அறிவிக்கப்பட வாய்ப்பிருக்கிறது. அதே நேரத்தில் டெல்லி மக்களுக்கு குடிநீர் குழாய்கள் வழியே சுத்தமான குடிநீர் வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
பெண்கள், முதியோர், ஆட்டோ ஓட்டுநர் ஆகிய வாக்காளர்களுக்கு ஆம்ஆத்மி கட்சியும் பெரிய திட்டங்களை அறிவித்திருக்கிறது. முதியோர்களுக்கான சஞ்சீவி யோஜனா, பெண்களுக்கு ரூ.2,100 இன்ஷூரன்ஸ், ஆட்டோ ஓட்டுநர்களுக்கு ரூ.10 லட்சம் இன்ஷூரன்ஸ், முதிய பெண்கள், பூசாரிகளுக்கு ரூ.18,000 சம்பளம் ஆகிய திட்டங்களை செயல்படுத்தப்போவதாக முன் மொழிந்திருக்கிறது.