சென்னை: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உத்தரவாதத் திட்டத்தின் கீழ் பணியாற்றும் கிராமப்புற குடும்பங்களுக்கு ஊதிய நிலுவைத் தொகையை வழங்கும் பொருட்டு நிதியை விடுவிக்கக் கோரி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடிக்கு இன்று கடிதம் எழுதியுள்ளார்.
அக்கடிதத்தில், 'தமிழ்நாட்டில் 76 இலட்சம் குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 91 இலட்சம் தொழிலாளர்கள் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டப் பணிகளில் தீவிரமாகப் பங்கேற்று வருகின்றனர் என்றும், 86% வேலைவாய்ப்பு பெண் தொழிலாளர்களுக்கு வழங்கப்படுவதுடன் கிட்டத்தட்ட 29% தொழிலாளர்கள் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி வகுப்பு குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் என்பதை கவனத்தில் கொள்ளவேண்டியது அவசியம் என்றும், தமிழக முதல்வர் கூறியுள்ளார். மேலும் இத்திட்டத்தின் கீழ் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 1 லட்சம் மாற்றுத்திறனாளி தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது என்றும் தனது கடிதத்தில் முதலமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இத்திட்டத்தின் கீழ் 2024-25ஆம் ஆண்டில், 06.01.2025 வரை 20 கோடி மனித உழைப்பு நாட்களாக இருந்த நிலையில், தமிழ்நாடு ஏற்கனவே 23.36 கோடி மனிதஉழைப்பு நாட்களை எட்டியுள்ளது என்றும் தமிழ்நாட்டிற்கான தொழிலாளர் வரவு செலவுத் திட்டத்தை 20 கோடி மனித சக்தி நாட்களிலிருந்து 35 கோடி மனித சக்தி நாட்களாக உயர்த்துவதற்கான செயற்குறிப்பு ஏற்கனவே 23.11.2024 அன்று ஒன்றிய அரசின் ஊரக வளர்ச்சி அமைச்சகத்திற்கு அனுப்பப்பட்டு ஒப்புதலுக்காக காத்திருக்கிறது என்றும் தமது கடிதத்தில் அவர் தெரிவித்துள்ளார்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உத்தரவாதத் திட்டத்தின் கீழ் பணியாற்றும் கிராமப்புற குடும்பங்களுக்கு ஊதிய நிலுவைத் தொகையை வழங்கும் பொருட்டு நிதியை விடுவிக்கக் கோரி மாண்புமிகு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்கள், மாண்புமிகு இந்தியப் பிரதமர் திரு. @narendramodi அவர்களுக்குக் கடிதம். pic.twitter.com/4IqekPGwJJ
— TN DIPR (@TNDIPRNEWS) January 13, 2025
தற்போது தொழிலாளர் வரவு செலவுத் திட்டத்தின்படி ஊதிய நிதி முற்றிலும் தீர்ந்துவிட்டதால், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் தமிழ்நாடு தொழிலாளர்களுக்கு கடந்த இரண்டு மாதங்களாக 1,056 கோடி ரூபாய் ஊதியம் வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளதை முதலமைச்சர் தமது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன் தமிழ் மக்களின் முதன்மையான மற்றும் முக்கியமானதுமானதுமான அறுவடைத் திருநாளான பொங்கல் பண்டிகை, ஜனவரி இரண்டாம் வாரத்தில் தமிழ்நாட்டின் ஒவ்வொரு வீட்டிலும் கொண்டாடப்படுகிறது என்பதை தாம் சுட்டிக்காட்ட விரும்புகிறேன் என்று முதலமைச்சர் தமது கடிதத்திவ் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இத்திட்டத்தின்கீழ் கடினமாக உழைத்த தொழிலாளர்களுக்கு ஊதியத்திற்கான நிதி விடுவிப்பதில் ஏற்பட்ட தாமதம் ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கு நிதி நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது என்றும், இதுவரை நிலுவையில் உள்ள ரூ.1.056 கோடி ஊதிய நிலுவைத் தொகையை விடுவிக்குமாறு ஊரக வளர்ச்சி அமைச்சகத்திற்கு அறிவுறுத்துமாறு பிரதமரை தாம் கேட்டுக்கொள்கிறேன் என்று முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
தமிழ்நாட்டில் 2024-2025 ஆம் ஆண்டிற்கான திருத்தப்பட்ட தொழிலாளர் வரவு செலவுத் திட்டத்திற்கு முந்தைய ஆண்டுகளில் செய்யப்பட்டதைப்போன்று ஒப்புதல் அளிக்க வேண்டும்.' எனவும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமது கடிதத்தில் கேட்டுக்கொண்டுள்ளார்.