சென்னை: கீழ்ப்பாக்கம் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் வெளி நோயாளியாகவும், உள்நோயாளியாகவும் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு எப்போதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருக்கும்.
இந்த நிலையில், நேற்று (ஜன.12) அதிகாலை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் பெண்கள் வார்டில் பெண்கள் உறங்கிக் கொண்டிருந்தபோது, வில்லிவாக்கம் பகுதியைச் சேர்ந்த 50 வயது பெண் ஒருவருக்கு மர்ம நபர் ஒருவர் திடீரென பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அப்பெண் கூச்சலிட, அனைவரும் எழுந்து அந்த மர்ம நபரை சுற்றி வளைத்து பிடித்துள்ளனர். இதையடுத்து மருத்துவமனை அலுவலர்கள் அவரை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
போலீசார் நடத்திய விசாரணையில், அந்த நபர் ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த சதீஷ்குமார் என்பதும், இவரது உறவினர் ஒருவர் மருத்துவமனையில் பணிபுரிந்து வந்ததால், அவரை சந்திக்க வந்த அவர் மதுபோதையில் அங்கேயே தங்கியுள்ளார்.
பின்னர் அவர் பெண்கள் வார்டுக்குள் புகுந்து 50 வயது பெண் ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அவர் மீது பெண் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: இல்லீகல் என்ட்ரி; திருப்பூர் நிறுவனங்களில் பணியாற்றிய வங்கதேச நாட்டினர் 31 பேர் கைது!
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு அப்டேட்:
சென்னை, பெரம்பூரில் கடந்தாண்டு ஜூன் மாதம் 5ம் தேதி பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில், வேலூர் சிறையில் வேறொரு குற்ற வழக்கில் அடைக்கப்பட்டு இருந்த ரவுடி நாகேந்திரன் முதல் குற்றவாளியாகவும், அவரது மகன் அஸ்வத்தாமன் மூன்றாவது குற்றவாளியாகவும் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், இதுவரை மொத்தமாக இந்த கொலை வழக்கில் 28 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதையடுத்து ரவுடி நாகேந்திரனின் கூட்டாளிகளை ரவுடிகள் ஒழிப்பு நுண்ணறிவு போலீசார் தீவிரமாக கண்காணித்து வந்தனர். இந்த நிலையில், ரவுடி நாகேந்திரனின் சகோதரர்கள் மற்றும் அவரது கூட்டாளிகள் இணைந்து வேறொருவரை கொலை செய்ய திட்டம் தீட்டி வந்ததாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து கடந்த 7ம் தேதி ரவுடி நாகேந்திரனின் சகோதரர்கள் வீடு மற்றும் அவரது கூட்டாளிகள் வீட்டில் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில் போலீசார் 51 பட்டா கத்திகள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களை பறிமுதல் செய்து 7 பேரை கைது செய்தனர். அவர்களிடம் நடத்தியா விசாரணையில் மேலும் சிலர் வீட்டில் ஆயுதங்கள் பதுக்கி வைத்திருப்பதாக அவர்கள் தெரிவித்ததை அடுத்து, இன்று போலீசார் மீண்டும் வியாசர்பாடியில் உள்ள அஸ்வத்தாமன் புது வீடு, அவரது கூட்டாளின் வீடுகளில் சோதனை நடத்தினர்.
இதையும் படிங்க: முன்னோர்கள் வாக்கு; ஆறு தலைமுறையாக பொங்கல் கொண்டாடாத கிராமம்..! ஏங்கும் பெண்கள்!
இந்த சோதனைகளில் சில சொத்து ஆவணங்களும் சிக்கி உள்ளதாகவும், அதனை முறைகேடாக அவர்கள் வாங்கி உள்ளார்களா என்பது குறித்து விசாரணைகள் நடத்தி உள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மெரினாவில் இளைஞர் தற்கொலை முயற்சி
சென்னை, நேப்பியர் பாலம் அருகே உள்ள கடலோரக் காவல் படை காவல் நிலையம் அருகில் இளைஞர் ஒருவர் தான் உயிரை மாய்த்துக் கொள்ளப் போவதாக கூறி தற்கொலைக்கு முயன்றுள்ளார். அப்போது அங்கு இருந்த பொதுமக்கள் அவரை தடுத்து நிறுத்திய போது அவர்களை மீறி அவர் தற்கொலைக்கு முயன்றார்.
இதையடுத்து நீச்சல் தெரிந்த பொதுமக்கள் உதவியுடன் போலீசார் அவரை மீட்டு நடத்திய விசாரணையில், முதலில் தன் தாய் திட்டியதாக கூறிய அவர், பிறகு தனது தந்தை திட்டியதால் தற்கொலைக்கு முயன்றதாக தெரிவித்துள்ளார்.
மேலும், அந்த நபர் மது போதையில் இருந்ததால் அவர் குறித்த முழு தகவலை சேகரிக்க முடியாமல் போலீசார் அவரை மீட்டு காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை செய்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.