சோனாமார்க்: பிரதமர் நரேந்திர மோடி ஜம்மு & காஷ்மீரில் உள்ள சோனாமார்க் சுரங்கப்பாதையை தொடங்கி வைத்து உரையாற்றினார். சுரங்கப்பாதை திட்டத்தின் கட்டுமானப்பணியின் போது உயிர் தியாகம் செய்த தொழிலாளர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி மரியாதை செலுத்தினார். இந்த திட்டம் சுற்றுலாவுக்கும், இந்த பிராந்தியத்தின் தொடர்புக்கும் துணையாக இருக்கும் என்று கூறினார்.
உயிர் தியாகம் செய்த 7 பேர்: ஸ்ரீநகர்-சோனாமார்க் இடையேயான நெடுஞ்சாலையில் உள்ள சோனாமார்க் சுரங்கப்பாதையை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து சுரங்கத்தின் வழியே மத்திய அமைச்சர்கள், துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா, முதலமைச்சர் உமர் அப்துல்லா ஆகியோருடன் பிரதமர் நரேந்திர மோடி பயணம் மேற்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து விழாவில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி,"மிகவும் தீவிரமான சிக்கலான சூழல்களில் பணியாற்றிய சகோதர ர்களை வாழ்த்துகின்றேன். ஜம்மு-காஷ்மீரின், நாட்டின் வளரச்சிக்கு தங்கள் உயிரை அவர்கள் இழந்திருக்கின்றனர். இந்த திட்டம் நனவாவதற்காக தங்கள் உயிரை தியாகம் செய்த ஏழுபேரை நான் நினைவு கூர்கின்றேன்.
ஒவ்வொருவருக்குமான அரசாக, ஒவ்வொருவரின் வளர்ச்சிக்கானது என்ற இலக்கை அடைய மத்திய அரசு பணியாற்றுகிறது. இரண்டு நாட்களுக்கு முன்பு முதலமைச்சர் உமர் அப்துல்லா இந்த இடத்தின் சில படங்களை சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார். அனைத்தையும் பார்த்தபிறகு, இங்கு உங்களுக்கு மத்தியில் வருவதற்கு ஆவலுடன் காத்திருந்தேன். இந்த பிராந்தியத்துடன் எனக்கு நீண்ட நெடிய தொடர்பு உள்ளது.
கோரிக்கை நிறைவேற்றம்: சோனாமார்க், குல்மார்க், பாரமுல்லா உள்ளிட்ட இடங்களில் நான் நேரத்தை செலவிட்டிருக்கின்றேன். பெரும் பனிப்பொழிவுகளின் போது நாங்கள் நடந்து சென்றிருக்கின்றோம். ஆனால், எப்போதும் கதகதப்பாக இருக்கும் இப்பகுதி மக்களால் குளிர் எங்களை மறக்கச் செய்து விடும். நாடு மிக நீண்டநாட்களாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த இந்த திட்டத்தை திறந்து வைக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்திருக்கிறது. ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் பகுதியின் மற்றும் ஒரு நீண்டகால கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதுதான் மோடி என்பதை நீங்கள் உறுதியாக தெரிந்து கொள்ள முடியும். ஒரு வாக்குறுதியைக் கொடுத்து விட்டால், அதனை நிறைவேற்றுவேன். ஒவ்வொரு பணிக்கும் ஒரு நேரம் உள்ளது. சரியான வேலை சரியான நேரத்தில் செய்யப்பட வேண்டும். இந்த சோனாமார்க் சுரங்கம் காரணமாக சோனாமார்க், அதே போல கார்கில், லே ஆகிய பகுதியை சேர்ந்தவர்களின் வாழ்க்கை மேலும் எளிதானதாக மாறும். சோனாமார்க் சுரங்கத்தின் கட்டுமானம் எங்களது அரசு அதிகாரத்துக்கு வந்தபோது 2015ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த சுரங்கத்தை எங்கள் அரசு மட்டுமே முடித்து வைத்துள்ளது என்பதில் எனக்கு மகிழ்ச்சி.
நாம் என்ன திட்டத்தை ஆரம்பித்தாலும்,அதை நாமே தொடங்கி வைக்க வேண்டும் என்பதுதான் மந்திர வார்த்தையாகும். சோனாமார்க் உட்பட இந்த ஒட்டு மொத்த பகுதிக்கும் இந்த சுரங்கமானது சுற்றுலா மேம்பாட்டை முன்னெடுத்துச் செல்வதற்கான புதிய சிறகை அளிக்கிறது. வரும் நாட்களில் பல்வேறு சாலை திட்டங்கள், ரயில் தொடர்பு திட்டங்கள் ஜம்மு-காஷ்மீரில் நிறைவேற்றப்பட உள்ளன. ரயில் பாதையால் காஷ்மீர் இணைக்கப்படும். மருத்துவமனைகள் கட்டப்பட்டு வருகின்றன. கல்லூரிகள் கட்டப்பட்டு வருகின்றன. இது புதிய ஜம்மு-காஷ்மீராகும். இந்த திட்டத்தின் வெற்றி என்பது காஷ்மீரின் மக்களை சார்ந்தது. மக்களான நீங்கள்தான் ஜனநாயகத்தை வலுப்படுத்துகின்றீர்கள்,"என்றார். பிரதமர் நரேந்திர மோடி தவிர, மத்திய சாலைப் போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி, துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா, முதலமைச்சர் உமர் அப்துல்லா ஆகியோரும் இந்த நிகழ்வில் உரையாற்றினர்.