திருமலை: உலகப் புகழ்பெற்ற திருப்பதி திருமலை கோயில் உள்ள வெங்கடாஜலபதியைத் தரிசிக்க நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இவ்வாறு வரும் பக்தர்களுக்கு புவிசார் குறியீடு பெற்ற லட்டு திருப்பதி திருமலை தேவஸ்தானத்தால் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், திருப்பதி லட்டுவில் விலங்கு கொழுப்பு கலக்கப்பட்டிருப்பதாக ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார்.
இதற்கு ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தரப்பில் கடும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டது. ஆனால், இது அடங்குவதற்குள் தெலுங்கு தேசம் கட்சியின் செய்தித் தொடர்பாளர், திருப்பதி லட்டுவின் ஆய்வக அறிக்கையை வெளியிட்டார். அதில், திருப்பதி லட்டு தயாரிப்பில் மாட்டுக் கொழுப்பு, பன்றி கொழுப்பு மற்றும் மீன் எண்ணெய் ஆகியவை கலந்திருப்பது தெரிய வந்தது.
இதனையடுத்து, இது தேசிய அளவிலான விவகாரமாக மாறியது. மேலும், திருப்பதி திருமலை தேவஸ்தானத்திற்கு நெய் விநியோகம் செய்த, தமிழகத்தின் திண்டுக்கல்லைச் சேர்ந்த ஏஆர் டெய்ரி நிறுவனமும் விளக்கம் அளித்தது. தொடர்ந்து, அந்நிறுவனத்திற்கு மத்திய உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சென்று நெய் மாதிரிகளை சேகரித்தனர்.