ஹைதராபாத்:கர்நாடகாவின் குடகு மாவட்டம், சுண்டிகோப்பாவில் உள்ள ஒரு காபி தோட்டத்தில் கடந்த அக்டோபர் 8 ஆம் தேதி உடல் கருகிய ஆண் சடலம் ஒன்றை போலீசார் கண்டுபிடித்தனர். உயிரிழந்த நபரின் அடையாளம் தெரியவில்லை. இதனையடுத்து உடலை பிரேத பரிசோதனைகாக அனுப்பி வைத்த போலீஸார் விசாரணையை தீவிரப்படுத்தினர்.
முதற்கட்டமாக அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் ஒரு சிவப்பு நிற கார், அப்பகுதியில் சுற்றி திரிந்துள்ளது. அந்த காரின் பதிவெண் குறித்து மேற்கொண்ட விசாரணையில், தெலுங்கானவை சேர்ந்த தொழிலதிபர் ரமேஷ் என்பவர் பெயரில் அந்த கார் பதிவு செய்யப்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது.
மேலும் கடந்த சில நாள்களுக்கு முன்னர் ரமேஷ் காணாமல் போய் இருப்பதாக அவர் மனைவி நிஹாரிகா (29) என்பவர் காவல் நிலையத்தில் புகார் அளித்து இருந்ததும், இதனை ஹைதராபாத் போலீசார் விசாரத்து வந்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து, கர்நாடக காவல்துறையினர், தெலங்கானா காவல்துறையினருடன் இணைந்து விசாரணையைத் தீவிரப்படுத்தினர்.
இதையும் படிங்க:19 வயது கர்ப்பிணியை நண்பர்களுடன் சேர்ந்து கொன்ற காதலன்.. விசாரணையில் பகீர் தகவல்!
முதலில், காணாமல் போன ரமேஷ்தான் கொலை செய்யப்பட்டவர் என்று தெரிய வந்ததும். அவரது மனைவி மீது காவல்துறைக்கு சந்தேகம் வந்தது. தொடர்ந்து அவரது மனைவியிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில், நிஹாரிகா தனது நண்பருடன் இருவருடன் சேர்ந்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டார் என போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
மேலும் பொறியியல் படித்த நிஹாரிகா, ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்தானவர் என்பதும், பண மோசடியில் கைது செய்யப்பட்டு சிறை சென்று வெளியே வந்ததும் தெரியவந்துள்ளது. மேலும், சிறையில் வெளியே வந்ததும் ரமேஷை திருமணம் செய்து கொண்டு அவருடைய 8 கோடி மதிப்பிலான சொத்துகளை தன்னுடைய பெயருக்கு மாற்ற வேண்டும் என வற்புறுத்தியுள்ளார்.
இதற்கு ரமேஷ் ஒத்துவராத காரணத்தால் கடந்த அக்டோபர் 1 ஆம் தேதி ஹைதராபாத்தில் உள்ள உப்பல் பகுதியில் ரமேஷை கொலை செய்து அவரது உடலைக் கர்நாடகாவின் சுண்டிகோப்பாவில் வீசி சென்றதும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.