ராஞ்சி:ஜார்கண்ட் மாநிலம், ராஞ்சியில் இருந்து சுமார் 30 கிலோ மீட்டர் தொலைவில் குந்தி பழங்குடியினர் அதிகமானோர் வசித்து வருகின்றனர். இங்குள்ள கிராமங்கள் மத்திய அமைச்சர் அர்ஜூன் முண்டாவின் தொகுதிக்குட்பட்ட பகுதியைச் சார்ந்தவையாக உள்ளன.
இந்த நிலையில், இங்குள்ள மரங்காடா, சிச்சிகிடா, கூடா, சர்வாடா, லாண்டப், போசியா, டெஹ்கேலா ஆகிய கிராமங்களில் வசிக்கும் குந்தி பழங்குடியினர் சமூகத்தைச் சேர்ந்த பெரும்பாலான சிறுமிகள் கர்ப்பமடைந்து குழந்தைகளைப் பெற்றெடுத்து வருவதாக அதிர்ச்சி ரிப்போர்ட் கிடைத்துள்ளது.
இதுகுறித்து ஆய்வில் இறங்கிய ஈடிவி பாரத், சம்பந்தப்பட்ட மருத்துவமனைகளில் இருந்த பதிவேடுகள் மூலமாக இந்தச் சம்பவத்தை உறுதி செய்துள்ளது. அதன்படி, மேற்கண்ட கிராமங்களைச் சேர்ந்த 12 முதல் 16 வயது வரையிலான சிறுமிகள் 75 முதல் 80 பேர் கடந்த மூன்றே மாதங்களில் அரசு மருத்துவமனைகளில் குழந்தை பெற்றுள்ளனர்.
இதுகுறித்து அப்பகுதியில் பணியாற்றும் அறுவை சிகிச்சை நிபுணர் நாகேஷ்வர் மஞ்சி கூறும்போது, இந்த பகுதிகளில் குழந்தை திருமணங்கள் நடப்பதாகவும், குறிப்பாக மரங்காடா, சிச்சிகிடா, கூடா, சர்வாடா, லாண்டப், போசியா, டெஹ்கேலா போன்ற ஓபியத்தால் அடிமையான கிராமங்களில் பெரும்பாலான வழக்குகள் பதிவாகுவதாக தெரிவித்தார்.
'ஓபியம்' என்பது கஞ்சாவைப் போல அப்பகுதியில் எளிதில் கிடைக்கக்கூடிய போதைச் செடியாகும். மேலும், இப்பகுதியில் உள்ள பழங்குடியின சிறுமிகள் கர்ப்பமாவதற்கு இரு முக்கிய காரணங்கள் சொல்லப்படுகிறது. அதாவது, பழங்குடியினரின் 'துக்கு' என்கிற கலாச்சாரப்படி, சிறுமிகள் அவர்களது வயதில் உள்ள ஆண்களுடன் திருமணம் செய்து கொள்ளாமல் உறவு வைத்துக்கொள்ள அனுமதிக்கப்படுகிறார்கள். மற்றொரு காரணம், போதையூட்டும் ஓபியத்துக்கு அடிமையாகி, தன்னிலை மறந்து உறவு கொள்வதனாலும் சிறுமிகள் கர்ப்பம் அடைகின்றனர்.