வயநாடு:கேரள மாநிலம் வயநாடு பகுதியில் பெய்த தொடர் கனமழையால் குரல்மலை, முண்டக்கை உள்ளிட்ட பகுதிகளில் நிலச்சரிவுகள் ஏற்பட்டு பலர் சிக்கிக்கொண்டனர். இந்த விபத்தில் தற்போது வரை 151 பேர் உயிரிழந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கரைபுரண்டு ஓடும் வெள்ளத்தில் வீடுகள் பல சிக்கியுள்ளன. அதில் இருக்கும் மக்களை மீட்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. மீட்புப் பணியில் போலீசார், தீயணைப்பு படையினர், வனத் துறையினர் மற்றும் தேசிய பாதுகாப்பு மீட்புப் படை (NDRF) வீரர்கள் உள்ளிட்ட பலர் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் கேரளாவிற்கு பல்வேறு பகுதிகளில் இருந்தும் நிவாரண பொருட்கள் மற்றும் மீட்பு பொருட்கள் அனுப்பிவைக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தமிழ்நாட்டிலிருந்து அனைத்து வகையிலும் உதவி செய்யப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.
தொடர்ந்து பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்வதில் கேரள அரசுக்குத் துணையாக பணியாற்றிடத் தமிழகத்திலிருந்து இரண்டு மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளான சமீரன் மற்றும் ஜானி டாம் வர்கீஸ் ஆகியோர் தலைமையில் மீட்புக் குழுவினரை உடனடியாக அனுப்பிட முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டார்.
மேலும், பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் நிவாரணப் பணிகளுக்கென கேரள அரசுக்கு, தமிழக அரசின் சார்பில் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து 5 கோடி ரூபாயினை வழங்கினார். இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசின் பேரிடர் மீட்பு படை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் குழு மற்றும் மருத்துவ குழுவினர் இன்று அதிகாலை 3.45 மணிக்கு வயநாடு சென்றடைந்தனர்.
தமிழக ஐஏஎஸ் அதிகாரிகள் குழு வயநாடு சென்றது:தமிழக குழு தற்போது வயநாட்டில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் இருப்பதாகவும், காலை 10 மணிக்கு பிறகு மீட்பு பணிக்கு செல்ல உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே, வயநாடு சென்ற தமிழ்நாடு அரசின் இரண்டு மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் கேரளா மாநில அரசின் மூத்த அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளனர். இந்த ஆலோசனையை தொடர்ந்து வயநாடு மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து இன்று காலை முதல் மீட்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
இந்த நிலையில் கோவையிலிருந்து மீட்புப் பணிகளுக்கு பயன்படுத்தும் வகையில் 5 பொக்லைன் வாகனங்கள் மற்றும் இறந்தவர்களின் உடல்களைப் பதப்படுத்தி வைக்கும் பிரீசர் பாக்ஸ்கள் (freezer box) பத்து முதற்கட்டமாக அனுப்பி வைக்கப்பட்டன. கோயம்புத்தூர் மாநகராட்சி தெற்கு மண்டல அலுவலக வளாகத்தில் இருந்து மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் மற்றும் அதிகாரிகள் அனுப்பி வைத்தனர்.
இதையும் படிங்க:ஓடும் பேருந்தில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை.. ஹைதராபாத்தில் பயங்கரம்!