ஹைதராபாத்: நடிகை தமன்னா, இந்திய சினிமாவில் ஒர் முக்கிய பங்கு வகித்து வருகிறார். தற்போது இவர் நடித்துள்ள அரண்மனை 4 திரைப்படம் வரும் மே 3ஆம் தேதி வெளியாக உள்ளது. திரைப்படங்களில் மட்டுமல்லாது, சமீப காலமாக வெப் சீரியஸிலும் ஆர்வம் காட்டி வருகிறார்.
இந்த நிலையில், நடிகை தமன்னாவிற்கு சட்டவிரோதமாக ஐபிஎல் ஒளிபரப்பு செய்யப்பட்ட வழக்கில், மும்பை சைபர் செல் சமன் அனுப்பி உள்ளது. கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டியை சட்டவிரோதமாக ஃபேர்பிளே செயலியில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. இது தொடர்பாக ஐபிஎல் போட்டியை ஒளிபரப்பு செய்ய உரிமம் பெற்ற நிறுவனம் ஒன்று, ஃபேர்பிளே நிறுவனம் மீது புகார் அளித்தது.
ஐபிஎல் போட்டியை ஒளிபரப்பு செய்ய நாங்கள் உரிமம் பெற்றுள்ள நிலையில், ஃபேர்பிளே மொபைல் செயலி சட்டவிரோதமாக ஒளிபரப்பு செய்ததால், எங்கள் நிறுவனத்திற்கு சுமார் 100 கோடி அளவிற்கு இழப்பு ஏற்பட்டு உள்ளது என அந்நிறுவனம் புகார் அளித்திருந்தது.
இந்த வழக்கின் விசாரணை கடந்த செப்டம்பர் மாதம் தொடங்கியது. அதன் அடிப்படையில், கடந்த டிசம்பரில் ஃபேர்பிளே மொபைல் செயலியின் ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டார். இந்த மொபைல் செயலியை விளம்பரப்படுத்தும் நோக்கில், நடிகர் சஞ்சய் தத், நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ், தமன்னா பாட்டியா ஆகியோர் நடித்திருந்தனர். இவர்களிடம் விசாரணை மேற்கொள்வதற்காக மும்பை சைபர் செல் சம்மன் அனுப்பி வருகிறது.
முன்னதாக, நடிகர் சஞ்சய் தத்திற்கு மும்பை சைபர் செல் இந்த வாரத்தில் ஆஜராகும்படி சம்மன் அனுப்பியது. ஆனால், சஞ்சய் தத், தான் இந்தியாவில் இருக்க மாட்டேன், அதனால் வேறு தேதியில் ஆஜாராகி வாக்குமூலம் கொடுப்பதாக தெரிவித்துள்ளார். இந்த நிலையில், நடிகை தமன்னாவிற்கு மும்பை சைபர் செல் வரும் 29ஆம் தேதி ஆஜராகும்படி சம்மன் அனுப்பி உள்ளது.
ஃபேர்பிளே மொபைல் செயலி மகாதேவ் செயலியின் கீழ் செயல்படுகிறது. மகாதேவ் செயலி ஏற்கனவே சர்ச்சைக்குள்ளான நிலையில், அதன் உரிமையாளர் வெளிநாட்டில் பதுங்கி இருக்கின்ற நிலையில், அவரை கைது செய்ய மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
இதையும் படிங்க:“அட்லீஸ்ட் அவர் பையன் கூடவாது நடிக்கனும்..” - ரவீனா குறிப்பிட்டது யாரை? - Half Bottle Album Song