மீரட் (உத்தரப்பிரதேசம்): அறுவை சிகிச்சையின் போது பெண்ணின் சிறுநீரகம் திருடப்பட்டதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, 6 மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
உத்தரப்பிரதேச மாநிலம், புலந்த்ஷஹர் மாவட்டத்தின் புக்ராசியைச் சேர்ந்த கவிதா என்பவர் மீரட்டில் உள்ள கே.எம்.சி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம் மீது நேற்று புகார் ஒன்றை அளித்தார். அதில் தனக்கு அறுவை சிகிச்சை நடந்த போது 6 மருத்துவர்கள் தனது சிறுநீரகத்தை திருடி விட்டதாக குற்றம் சாட்டினார்.
சிறுநீரகம் திருட்டு தொடர்பாக மருத்துவமனையில் கேட்ட போது, மருத்துவர்கள் தன்னை அடித்து, தனது அனைத்து ஆவணங்களையும் பறித்ததாக கவிதா கூறியதாக எஃப்.ஐ.ஆர். பதிவு தெரிவிக்கிறது. 2017 ஆம் ஆண்டு, திடீரென உடல்நிலை சரியில்லாமல் மீரட் பாக்பத் சாலையில் உள்ள கே.எம்.சி மருத்துவமனையில் கவிதா என்பவர் சிகிச்சை பெற்றார். அவரை பரிசோதித்த பிறகு, டாக்டர் சுனில் குப்தா அறுவை சிகிச்சைக்கு பரிந்துரைத்தார்.
மே 20, 2017 அன்று கவிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை நடைபெற்றது. அறுவை சிகிச்சையின் போது அந்த பெண்ணின் சிறுநீரகம் திருடப்பட்டதாக கூறப்படுகிறது. பின்னர் வீட்டிலேயே அவர் தொடர்ந்து குணமடைவார் என்ற புரிதலுடன், மே 24, 2017 அன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
இந்த நிலையில், டாக்டர் சுனில் குப்தா தலைமையிலான மருத்துவர்கள் தனது சிறுநீரகத்தை அகற்றி ஒருவருக்கு விற்றுவிட்டதாக பாதிக்கப்பட்ட கவிதா குற்றம்சாட்டினார். கடந்த 2022-ம் ஆண்டு அக்டோபர் 28-ம் தேதி வேறொரு மருத்துவரிடம் பரிசோதித்தபோது, தனது இடதுபக்க சிறுநீரகம் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டதைக் கண்டுபிடித்ததாக கவிதா கூறினார். டாக்டர் சுனில் குப்தா தனக்கு தெரியாமல் தனது சீறுநீரகத்தை திருடி, வேறொருவருக்கு விற்று விட்டதாகவும், அவர் மிகப் பெரிய மனித உறுப்புகள் கடத்தல்காரராகவும் இருப்பதாக அவர் குற்றம்சாட்டினார்.