டெல்லி:சுவாதி மலிவாலின் இடது காலிலும், வலது கன்னத்திலும் சிராய்ப்பு காயங்கள் இருந்ததாக வெள்ளிக்கிழமை நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனை முடிவுகளில் கூறப்பட்டுள்ளது. எய்ம்ஸ் மருத்துவமனையின் இந்த அறிக்கையின் அடிப்படையில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் செயலாளர் பிபவ் குமார் மீது டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளதோடு அவரை கைதும் செய்துள்ளனர்.
முன்னாள் தேசிய மகளிர் ஆணைய தலைவரான சுவாதி மலிவால் ஆம் ஆத்மி கட்சியில் இணைந்து அக்கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் ஆனார். சொந்த கட்சியின் உறுப்பினரே கட்சிக்கு எதிராக புகார் அளித்திருப்பது அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான அந்த கட்சியை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
டெல்லி முதலமைச்சரின் வீட்டுக்குச் சென்ற போது, அவருடைய செயலாளரான பிபவ்குமார் தன்னை தாக்கியதாக சுவாதி மலிவால் புகார் கூறியிருந்தார். டெல்லி போலீசாரின் முதல் தகவல் அறிக்கையின் படி, பிபவ் குமார் சுவாதி மலிவாலை கன்னத்தில் அறைந்து, வயிற்றில் எட்டி உதைத்து தாக்கியதாக கூறப்பட்டுள்ளது.
ஆனால், இந்த பிரச்சனை பாஜகவின் சதியென கூறுகிறது ஆம் ஆத்மி கட்சி. இது தொடர்பாக பேசியுள்ள அக்கட்சியின் தலைவர்களில் ஒருவரான ஆதிஷி கெஜ்ரிவாலை குறிவைப்பதற்காக பாஜகவால் அனுப்பப்பட்ட நபர்தான் சுவாதி மலிவால் என கூறியுள்ளார். மலிவாலின் குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் ஆதாரமற்றவை எனவும் அவர் கூறியுள்ளார்.