புதுடெல்லி: ஜனநாயகத்தை பலவீனப்படுத்துகிறது என்பது உட்பட பாஜக மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்து ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்துக்கு கடிதம் எழுதியுள்ளார்.
மோகன் பகவததுக்கு அரவிந்த் கெஜ்ரிவால் எழுதியுள்ள கடிதத்தில் பாஜகவின் நடைமுறை, ஜனநாயகத்தின் மீதான அதன் தாக்கம் குறித்து பல்வேறு விஷயங்களில் கவலை தெரிவித்தும், அது குறித்து விளக்கம் அளிக்கும்படியும் கேட்டுள்ளார். கடந்த காலங்களில் பாஜகவின் தவறுகளுக்கு ஆர்எஸ்எஸ் ஆதரவு அளித்துள்ளதா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
பாஜக தலைவர்கள் வெளிப்படையாக வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கின்றனர். வாக்குகளை விலை கொடுத்து வாங்கும் பாஜகவை ஆர்எஸ் ஆதரிக்கிறதா இல்லையா?மேலும் டெல்லியில் உள்ள தலித், பூர்வாஞ்சல் வாக்குகள் பெரும் அளவில் நீக்கப்பட்டுள்ளது குறித்து கவலை தெரிவித்துள்ள கெஜ்ரிவால் இது ஜனநாயகத்துக்கு ஏற்றது என ஆர்எஸ்எஸ் நம்புகிறதா? என்றும் வினவியுள்ளார்.
"கடந்த காலங்களில் பாஜக எந்த தவறு செய்தாலும், அதற்கு ஆர்எஸ்எஸ் ஆதரவு அளித்ததா? பாஜக தலைவர்கள் வெளிப்படையாக வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கின்றனர். வாக்குகளை விலை கொடுத்து வாங்குவதை ஆர்எஸ்எஸ் ஆதரிக்கிறதா? இது சரியான ஜனநாயகம் என ஆர்எஸ் கருதுகிறதா? பாஜக ஜனநாயகத்தை பலவீனப்படுத்துவதாக ஆர்எஸ்எஸ் கருதவில்லையா?," என்று அரவிந்த் கெஜ்ரிவால் கேட்டுள்ளார்.
இதையும் படிங்க: வருங்கால வைப்பு நிதி, யுபிஐ பணப்பரிமாற்றங்களில் புதிய முறை... மாற்றங்களை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்
கடந்த திங்கள் கிழமையன்று ஆம் ஆத்மி செய்தித் தொடர்பாளர் பிரியங்கா காக்கார், "டெல்லி வாக்களர்களை பாஜக ஏமாற்ற முயற்சிக்கிறது. குறிப்பாக ஷதாரா தொகுதியில் வாக்குகளை நீக்குவதற்கான விண்ணப்பத்தை பாஜக தலைவர்களில் ஒருவரான விஷால் பரத்வாஜ் அளித்திருப்பதாக கூறியிருந்தார். டெல்லியில் வசிக்கும் பூர்வாஞ்சல் வாசிகளின் பெரும்பாலான வாக்குகளை பாஜக நீக்க விரும்புகிறது. இது குறித்து பாஜக தலைவர் விஷால் பரத்வாஜ் விண்ணப்பம் செய்திருந்தார். நாங்கள் எதிர்ப்புத் தெரிவித்ததும் அந்த முயற்சியை அவர் கைவிட்டார். புதுடெல்லி சட்டப்பேரவைத் தொகுதியில் பாஜக தலைவர் பரவேஸ் சர்மா வாக்காளர்களுக்கு பண விநியோகம் செய்தார். அதே போல வாக்காளர்களை நீக்குவதற்கும் விண்ணப்பம் அளித்துள்ளார்,"என்று கூறியுள்ளார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை இது குறித்து பேசிய அரவிந்த் கெஜ்ரிவால், பாஜக வாக்காளர் பட்டியலில் குளறுபடிகள் செய்கிறது என்று கூறியிருந்தார். டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேதியை தேர்தல் ஆணையம் விரைவில் வெளியிட உள்ளது. இந்த நிலையில் தேர்தல் குறித்து ஆம்ஆத்மி-பாஜக இடையே சர்ச்சை வெடித்துள்ளது.