டெல்லி:தமிழ்நாட்டிலுள்ள மணல் குவாரிகளில் சட்ட விரோத பணப் பரிவர்த்தனை நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்ததைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் பல இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அதன்பின், அமலாக்கத்துறை, சட்ட விரோத மணல் குவாரிகள் குறித்து மாவட்ட ஆட்சியர்கள், நீர்வளத்துறை முதன்மைப் பொறியாளர், ஓய்வு பெற்ற பொதுப்பணித்துறைப் பொறியாளர் உள்ளிட்ட பலருக்கு சம்மன் அனுப்பியிருந்தது.
அமலாக்கத்துறை அதிகாரிகள் அனுப்பிய சம்மனுக்கு எதிராக பொதுப்பணித்துறை செயலாளர், நீர்வளத்துறை கூடுதல் செயலாளர் மற்றும் மாவட்ட ஆட்சியர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தனர். மேலும். தமிழக அரசுத் தரப்பிலும் அமலாக்கத்துறை சம்மனுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கின் விசாரணையின்போது, அமலாக்கத்துறை அனுப்பிய சம்மன் மீது விசாரணை செய்ய இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது.
இவ்வாறான சென்னை உயர் நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவை எதிர்த்து, அமலாக்கத்துறை சார்ப்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தனர். இதேபோல் தமிழக அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு இன்று (பிப்.23) நீதிபதி பெலா எம் திரிவேதி முன்பு விசாரணைக்கு வந்தது.