டெல்லி: புதிய மதுபான கொள்கை முறைகேடு(Delhi Liquor scam case) வழக்கில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடைபெற்றதாக கூறி அரவிந்த் கெஜ்ரிவாலை கடந்த மார்ச் 11-ம் தேதி அமலாக்கத்துறை கைது செய்தது. இந்நிலையில், தேர்தல் பிரச்சாரத்திற்காக கெஜ்ரிவாலுக்கு ஜூன் 2-ம் தேதி வரை இடைக்கால ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இடைக்கால ஜாமீன் நிறைவடைந்ததும் ஜூன் 2-ம் தேதி திகார் சிறையில் கெஜ்ரிவால் சரணடைந்தார். இந்நிலையில், அமலாக்கத்துறை கைதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கில் ஜூலை 12 -ம் தேதி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையும் படிங்க -நிலச்சரிவில் குடும்பத்தை இழந்த ஸ்ருதி.. கடைசி துணையாக இருந்த காதலனும் விபத்தில் பலி.. கேரளாவில் மற்றொரு துயரம்!
இந்நிலையில், ஜூன் 26-ம் தேதி அரவிந்த் கெஜ்ரிவாலை சிபிஐ கைது செய்தது. அமலாக்கத்துறை வழக்கில் ஜாமீன் கிடைத்தபோதும், சிபிஐ வழக்கில் அவருக்கு ஜாமீன் கிடைக்காததால் தொடர்ந்து சிறையிலேயே இருந்து வருகிறார். இந்நிலையில் சிபிஐ கைது நடவடிக்கையை எதிர்த்தும், ஜாமீன் கோரியும் டெல்லி உயர் நீதிமன்றத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் மனுத் தாக்கல் செய்தார். இந்த வழக்கை ஆக.5-ம் தேதி டெல்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதனை எதிர்த்து அரவிந்த் கெஜ்ரிவால் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கு நீதிபதிகள் சூர்ய காந்த், உஜ்ஜல் புயான் அடங்கிய அமர்வில் விசாரணை நடைபெற்று வந்தது. அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதிகள் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கினர். மேலும், 10 லட்சம் ரூபாய் பிணைத்தொகை செலுத்த வேண்டும் என்றும் பொதுவெளியில் பேசக்கூடாது என்றும் நிபந்தனை விதித்துள்ளனர்.
அமலாக்கத்துறை, சிபிஐ பதிவு செய்த இரண்டு வழக்குகளில் இருந்து ஜாமீன் கிடைத்துள்ளதால், அரவிந்த் கெஜ்ரிவால் இன்று சிறையில் இருந்து வெளியே வருவார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கிய செய்தியை அறிந்த ஆம் ஆத்மி தலைவர்கள் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்திய வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது.