புதுடெல்லி:இந்தி கற்கக்கூடாது என்பதற்காக சில கட்சிகளால் அரசியல் சூழல் ஏற்படுத்தப்பட்டுள்ளது என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் கூறியதால் நாடாளுமன்ற மக்களவையில் சர்ச்சை ஏற்பட்டது. இதற்கு தமிழக எம்பிக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடரில் ஆறாவது நாளான இன்று பல்வேறு மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டன. வங்கி திருத்த சட்டத்தை தாக்கல் செய்து பேசிய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாரமன் ஒரு சில விஷயங்களை குறிப்பிடும் போது இந்தியில் பேசினார். அப்போது அவரது இந்தி பேச்சில் இவ்வாறு பேசியிருந்தால் நன்றாக இருக்கும் என சக எம்பி ஒருவர் சுட்டிக்காட்டினார்.
அப்போது பேசிய நிர்மலா சீத்தாராமன், "இவர்கள்தான் (தமிழ்நாட்டு எம்பிக்களை நோக்கி )தமிழ்நாட்டில் இருப்பவர்கள் இந்தி கற்கக்கூடாது என்று கூறினார்கள்,"என்று கூறினார். இதற்கு அவையில் இருந்த தமிழ்நாட்டை சேர்ந்த எம்பிக்கள் திருமாவளவன் உள்ளிட்டோர் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். அப்போது அவைத்தலைவர் ஓம்பிர்லா அவர்களை அமரும்படி கேட்டுக் கொண்டார்.
இதன் பின்னர் தொடர்ந்து பேசிய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன், "மதிப்பிற்குரிய உறுப்பினர்கள், இந்தி பேசுவதை எதிர்க்கவில்லை. இந்தி திணிக்கப்படுவதை மட்டுமே எதிர்ப்பதாக கூறுகின்றனர். இது குறித்து நான் விளக்கம் அளிக்க விரும்புகின்றேன். நான் சொல்லும் கருத்து இந்த சட்டத்திருத்தத்தோடு தொடர்புடையது அல்ல" என்று கூறினார்.
அப்போது எதிர்கட்சி வரிசையில் இருந்த எம்பி திருமாவளவன், "நாங்கள் இந்தி கற்பதை எதிர்க்கவில்லை. திணிப்பதை மட்டுமே எதிர்க்கின்றோம்," என்றார்.
இதற்கு பதில் அளிக்கும் வகையில் பேசிய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாரமன், "அவர்கள் இந்தி மொழியை எதிர்க்கவில்லை என்கின்றனர். நல்லது. அதனை நான் வரவேற்கின்றேன். யார் ஒருவரும், யார் மீதும் எதையும் திணிக்க முடியாது. ஒவ்வொரு மாநிலமும் சொந்த மொழியை கொண்டிருப்பது குறித்து பிரதமர் மோடி பெருமை படத் தெரிவித்திருக்கிறார். பொறியியல், மருத்துவம் போன்ற உயர் படிப்புகள் பிராந்திய மொழிகளில் இடம் பெற வேண்டும் என்றும் பிரதமர் மோடி கூறியிருக்கிறார். எனவே தமிழ்நாட்டில் மருத்துவ கல்வி தமிழில் கற்றுத்தரப்படுகிறது. யாரும் இந்தி கற்கக்கூடாது என்பதற்காக தமிழகத்தில் சில கட்சிகளால் அரசியல் சூழல் ஏற்படுத்தப்பட்டது.. மேலும் சிலர் கற்றுக்கொள்ள விரும்பினால் கேலி செய்கிறார்கள்,"என்று தெரிவித்தார். இதற்கு தமிழ்நாடு எம்பிக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
தொடர்ந்து பேசிய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன், "பிற மொழி பேசுபவர்களை வந்தேறிகள் என்று சொல்கின்றனர். இந்தியை கற்கக் கூடாது என்ற கருத்து தமிழ்நாட்டில் என் மீது திணிக்கப்பட்டது. இது என் மீது திணித்தது ஆகாதா? தனிநபர்கள் இந்தி கற்பதில் இவர்களுக்கு என்ன பாதிப்பு? நான் திருவள்ளுவர் கூறியதில் இருந்து கருத்தை கூறமுடியும். புறநானூறு பற்றி சொல்ல முடியும்.. ஏன் இந்தி படிக்கக்கூடாது என்று என் மீது கருத்தை திணித்தீர்கள்? என அவர்களிடம் கேட்க விரும்புகின்றேன்," என்றார். இதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோர் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
தொடர்ந்து பேசிய நிர்மலா சீத்தாராமன், "நீங்கள் நான் இந்தி படிப்பதை கூடாது என்று கூறினீர்கள். இந்த நாட்டில் பதவி வகித்த எந்த பிரதமர் ஐநாவில் தமிழ் குறித்து பெருமை படுத்தி பேசினார். எங்கள் பிரதமர் நரேந்திர மோடிதான் தமிழ் பற்றி ஐநாவில் குறிப்பிட்டார். தமிழர் என்ற முறையில் இவர்களால் நான் பாதிக்கப்பட்டுள்ளேன்,"என்றார்.
இதனைத் தொடர்ந்தும் திருமாவளவன் உள்ளிட்டோர் தங்கள் தரப்பு கருத்தைத் தெரிவிக்க அனுமதிக்கும்படி சபாநாயகரிடம் அனுமதி கேட்டனர். ஆனால், அதற்கு அவர் அனுமதி தரவில்லை. அவர்களை அமரும்படி கூறினார். இதன் பின்னர் வங்கி திருத்தச் சட்டம் குறித்து நிர்மலா சீதாராமன் பேசினார்.