சீகர்/ராஜஸ்தான்:சீகர் மாவட்டம் லக்ஷ்மங்கரில் இன்று (அக்டோபர் 29) பிற்பகல் வேகமாகச் சென்ற பேருந்து ஒன்று பாலத்தின் தடுப்புச் சுவரில் மோதியதில் 12 பேர் உயிரிழந்தனர். மேலும், 29 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் லக்ஷ்மங்கர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களுக்கு பிரதமர் நிவாரணம் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து லக்ஷ்மங்கர் (Laxmangarh) காவல் நிலைய உதவி ஆய்வாளர் ராம்தேவ் சிங் கூறுகையில், "சாலாசரிலிருந்து நவல்கர் நோக்கிச் சென்று கொண்டிருந்த பயணிகள் பேருந்து ஒன்று, லக்ஷ்மங்கரில் கட்டுப்பாட்டை இழந்து பாலத்தின் தடுப்புச் சுவரில் மோதியது. இந்த விபத்தில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். கூடுதலாக 3 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மேலும், 33 பேர் படுகாயமடைந்தனர்," என்று தெரிவித்தார்.
தற்போது காவல்துறை தரப்பில் இருந்து வெளியாகியிருக்கும் தகவல்களின்படி, உடல்நிலை மோசமான நிலையில் சிகிச்சைப்பெற்று வந்த மேலும் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12-ஆக அதிகரித்துள்ளது. தொடர்ந்து 29 பேர் படுகாயங்களுடன் சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.
விபத்து குறித்து காவல்துறை விசாரணை:
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் காயமடைந்தவர்களை மீட்டு லக்ஷ்மங்கர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். உயிரிழந்தவர்களின் உடல்கள் உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. விபத்து நடந்த இடத்தில் பெருமளவு பொதுமக்கள் திரண்டதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. லக்ஷ்மங்கர் காவல்துறையினர் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த விபத்து குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் அனுமன் பெனிவால் தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார். அவர் தனது எக்ஸ் பக்கத்தில், "சீகர் மாவட்டம் லக்ஷ்மங்கரில் நடந்த பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.