திண்டுக்கல்:வால்மீகி எழுதிய ராமாயணத்தில் ராமரின் மனைவி சீதையை ராவணன் கடத்தி செல்வதாகவும், ராவணனை ராமர் கொன்றுவிடுவதாகவும் சொல்லப்படுகிறது. அரக்கராக அறியப்படும் ராவணன் இலங்கை அரசனாகக் கூறப்பட்டாலும், அவரை பெரும்பான்மை மக்கள் விரும்பி வணங்குவதில்லை.
இந்நிலையில், நேற்று (ஜனவரி 22) ராமர் பிறந்த இடம் என்று கூறப்படும் அயோத்தியில் ராமர் சிலை நிறுவப்பட்டு பிரம்மாண்டமான முறையில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில், பிரதமர் மோடி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். இது குறித்து, இந்தியா முழுவதும் பேசப்பட்டு வரும் நிலையில், திண்டுக்கல் மாவட்டம், கொடைரோடு அருகே ராவணனுக்குத் தமிழில் சிறப்பு யாக வேள்வி பூஜை நடத்தி சிவனடியார்கள் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளனர்.
கொடைரோடு அருகே அமைந்துள்ள பள்ளப்பட்டி சிறுமலையின் அடிவாரப் பகுதியில் அமைந்துள்ளது 'ஓம் திருமேனி சங்கம ஆசிரமம்'. இங்குள்ள தமிழ் ஆலயத்தில் நேற்று ராமர் மற்றும் சீதாதேவிக்குத் தமிழில் யாக வேள்வி பூஜைகள் நடத்தப்பட்டன. இதனைத் தொடர்ந்து, இன்று (ஜன.23) காலை குடவாசல் சுவாமிகள் தலைமையில் தமிழ் ஆலயத்தில் அமைந்துள்ள குன்று பகுதியில், தமிழ் மன்னர்களில் ஒருவரான இலங்கேஸ்வரன் என்று அழைக்கப்பட்ட ராவணனுக்குச் சிறப்பு யாக வேள்வி பூஜைகள் நடத்தப்பட்டன.