டெல்லி : பஞ்சாப் மற்றும் அரியனாவின் தலைநகராக செய்லபட்டு வரும் சண்டிகர் மாநகராட்சிக்கு கடந்த ஜனவரி 30ஆம் தேதி மேயர் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில், பாஜக சார்பில் போட்டியில் மனோஜ் சோன்கருக்கு 16 வாக்குகளும், இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிட்ட ஆம் ஆத்மி வேட்பாளர் குல்தீப் குமார் 20 வாக்குகளும் கிடைத்தன.
இந்தியா கூட்டணி வேட்பாளர் வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தேர்தலை நடத்திய அதிகாரி அனில் மசிஹ், இந்தியா கூட்டணிக்கு கிடைத்த வாக்குகளில் 8 வாக்குகளை செல்லாது என அறிவித்தார். மேலும், பாஜக சார்பில் போட்டியிட்ட மனோஜ் சோன்கர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.
இந்தத் தேர்தலில் முறைகேடு நடந்துள்ளதாகவும், பாஜக வேட்பாளரின் வெற்றிக்கு இடைக்கால தடை விதிக்க கோரியும் ஆம் ஆத்மி கட்சி சார்பில் பஞ்சாப் - அரியானா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அங்கு மனுவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்ட நிலையில், ஆம் ஆத்மி வேட்பாளர் குல்தீப், உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டார்.
இந்த வழக்கை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்வு விசாரித்த நிலையில், வாக்கு எண்ணிக்கையின் போது தேர்தல் அதிகாரி அனில் மசிஹ், வாக்குச்சீட்டுகளில் திருத்தம் மேற்கொள்ளும் வீடியோ சாட்சியங்களாக சமர்ப்பிக்கப்பட்டன.
இதையடுத்து தேர்தல் அதிகாரி வாக்குச் சீட்டுகளை சீர்குலைத்திருப்பது வெளிப்படையாகத் தெரிவதாகவும் ஜனநாயகத்தை படுகொலை செய்வதற்கு சமம் என தெரிவித்த நீதிபதிகள், தேர்தலில் பதிவான வாக்குச் சீட்டுகள், தேர்தல் நடைமுறையை பதிவு செய்த அனைத்து ஆவணங்கள் மற்றும் வீடியோ பதிவுகள் உள்ளிட்டவற்றை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.
இந்நிலையில், இன்று (பிப். 20) மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், பஞ்சாப் - அரியானா உயர்நீதிமன்ற பதிவாளரால் நியமிக்கப்பட்ட நீதித் துறை அதிகாரி தேர்தல் தொடர்பான அனைத்து ஆவணங்கள் மற்றும் வீடியோ பதிவுகள், வாக்குச்சீட்டுகளை தாக்கல் செய்தார்.
வாக்குச் சீட்டுகளை ஆய்வு செய்த நீதிபதிகள், சண்டிகர் மேயர் தேர்தலில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்தவும், தேர்தல் அதிகாரியால் செல்லாது என அறிவிக்கப்பட்ட 8 வாக்குகளை செல்லுபடியாகும் என கணக்கில் எடுத்துக் கொண்டு மறுவாக்கு எண்ணிக்கை முடிவுகளை அறிவிக்க உத்தரவிட்டனர்.
மேலும், வாக்கு எண்ணிக்கை வீடியோ பதிவையும் உச்ச நீதிமன்றம் ஆய்வு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக சண்டிகர் மேயர் தேர்தல் குதிரைப் பேரம் போன்று நடந்து உள்ளதாகவும், தேர்தல் நடத்திய அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது குறிப்பிடத்தகக்து.
இதையும் படிங்க :சண்டிகர் மேயர் தேர்தல்: "மேயர் தேர்தலில் குதிரை பேரம்"- மறுதேர்தல் நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு!