டெல்லி :தேர்தல் பத்திரங்கள் குறித்த தரவுகளை வெளியிடக் கோரிய உத்தரவில் ஜூன் 30ஆம் தேதி வரை கால அவகாசம் கோரி ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய் சந்திரசூட் தலைமையிலான மனு தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
மேலும், நாளை (மார்ச்.12) மாலைக்குள் தரவுகளை வெளியிட வேண்டும் என்றும், எஸ்பிஐ வங்கி தரும் தரவுகளை தொகுத்து இந்திய தேர்தல் ஆணையம் மார்ச் 15ஆம் தேதி மாலை 5 மணிக்குள் தனது இணையதளத்தில் வெளியிட வேண்டும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. தலைமை நீதிபதி டி.ஒய் சந்திரசூட் தலைமையில் நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, பி.ஆர் கவாய், ஜே.பி பர்திவாலா, மற்றும் மனோஜ் மிஸ்ரா அகிய 5 பேர் கொண்ட அமர்வில் மனு விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள், தேர்தல் பத்திர விவரங்களை வெளியிடுவது என்பது எஸ்பிஐ வங்கிக்கு ஒன்றும் புதிய வேலை கிடையாது என்றும், இதற்கு முன்பும் இது போன்ற வேலைகளை எஸ்பிஐ வங்கி செய்துள்ளதால் தேர்தல் பத்திர விவரங்களை வெளியிட கால அவகாசம் கேட்பது ஏன் என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.