சென்னை: கேரள மாநிலம் கொச்சியில் இருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் நேற்று இரவு 171 பயணிகளுடன் சென்னைக்கு வந்து கொண்டு இருந்தது. இந்த விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது விமானத்தில் பயணித்து கொண்டிருந்த கேரள பயணி டேவீஸ் (35) மற்றும் அமெரிக்காவை சேர்ந்த கஸன் எலியா (32) ஆகிய இரு பயணிகளுக்கிடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது இரு பயணிகளும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டுள்ளனர்.
நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானத்துக்குள் இரண்டு பயணிகள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டு ரகளையில் ஈடுபட்டது சக பயணிகளை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. மேலும் அதில் ஒருவர் வெடிகுண்டுகள் இருப்பதாகவும் அதை எடுத்து வீசி விடுவோம் என்றும் மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால் விமானத்துக்குள் பெரும் பரபரப்பு நிலவியது.
அதிர்ச்சி அடைந்த விமான பணிப்பெண்கள் உடனடியாக விமானிக்கு தகவல் தெரிவித்தனர். உடனே விமானி சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு நடப்பதை தெரிவித்தார்.
இதையடுத்து சென்னை விமான நிலையத்தில் அதிரடிப்படை வீரர்கள், வெடிகுண்டு நிபுணர்கள், விமான பாதுகாப்பு அதிகாரிகள், மத்திய தொழில் பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் விமான நிலைய போலீசார் பெருமளவு குவிக்கப்பட்டனர். தொடர்ந்து நள்ளிரவு 12 மணி அளவில் அந்த விமானம் சென்னையில் தரையிறக்கப்பட்டது.
இதையும் படிங்க: பணி நிரந்தரம் வேண்டும்; ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற டாஸ்மாக் தொழிலாளர்கள் கைது!
அதன் பின்பு பாதுகாப்பு அதிகாரிகள் விமானத்துக்குள் ஏறி ரகளையில் ஈடுபட்ட இரு பயணிகளையும் பிடித்து முழுமையாக சோதனையிட்டனர். ஆனால் அவர்கள் இருவரிடமும் வெடிகுண்டுகள் எதுவும் இல்லை. ஆனாலும் பாதுகாப்பு அதிகாரிகளும், வெடிகுண்டு நிபுணர்களும் அந்த விமானத்தில் அனைத்து பகுதிகளையும் துருவித் துருவி சோதனை நடத்தினர்.
மேலும் விமானத்தில் இருந்த மற்ற பயணிகளிடமும் சோதனைகள் நடத்தப்பட்டன. இதையடுத்து இன்று அதிகாலை 2.30 மணிக்கு விமானத்தில் வந்த மற்ற பயணிகள் கீழே இறங்கி செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
இதற்கு இடையே விமானத்தில் ரகளையில் ஈடுபட்டு வெடிகுண்டுகள் மிரட்டல் விடுத்த இரண்டு பயணிகளையும் பாதுகாப்பு அதிகாரிகள் பிடித்து சென்னை விமான நிலைய போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் இருவரையும் தொடர்ந்து விசாரணை நடத்திக் கொண்டு வருகின்றனர். இவர்களுக்குள் ஏன் சண்டை ஏற்பட்டது? இருவரும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்க காரணம் என்ன? இவர்களின் பின்னணி என்ன? இருவரும் சென்னைக்கு எதற்காக வந்தனர் என்று தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
மேலும், இந்த சம்பவம் காரணமாக சென்னை விமான நிலையத்தில் நள்ளிரவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.