சென்னை: இந்தியாவின் 76-வது குடியரசு தினத்தை முன்னிட்டு, சென்னை மெரினா கடற்கரை உழைப்பாளர் சிலை அருகே நடைபெற்ற விழாவில், முதலமைச்சர் மு.க ஸ்டாலின் முன்னிலையில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவி தேசியக் கொடியை ஏற்றி வைத்து அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.
தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் உழைப்பாளர் சிலை அருகே 76 குடியரசு தின விழா நடைபெற்றது. இதையொட்டி, காலை 7.50 மணி அளவில் தமிழக போக்குவரத்து காவல் படையினரின் வாகன அணிவகுப்புடன் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வருகைப் புரிந்தார்.
அவரைத் தொடர்ந்து, ராணுவ வாகன அணிவகுப்புடன் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவி விழா நடைபெறும் இடத்துக்கு வந்தடைந்தார். அவரை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். பின்னர் முப்படை தளபதிகள், காவல் துறை உயர் அதிகாரிகள் ஆகியோரை ஆளுநருக்கு அறிமுகம் செய்து வைத்தார்.
அதனைத் தொடர்ந்து, காலை 8 மணிக்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் முன்னிலையில் தேசியக் கொடியை தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி ஏற்றி வைத்தார். அப்போது, ஹெலிகாப்டரில் இருந்து மலர்கல் தூவப்பட்டு, தேசிய கீதம் இசைக்கப்பட்டது.
தொடர்ந்து, ராணுவம், கடற்படை, விமானப்படை, கடலோர காவல் படை, தமிழக காவல் துறையின் பல்வேறு பிரிவினர், தேசிய மாணவர் படையினர், தமிழக வனத்துறை, சிறைத்துறை, தீயணைப்பு துறை, பள்ளி கல்லூரிகளின் பேண்டு வாத்திய குழுவினர், சாரண சாரணிய பிரிவினர், ஊர்க்காவல் படையினர் உள்ளிட்டோரின் அணிவகுப்பு மரியாதையை ஆளுநர் ஏற்றுக்கொண்டார்.
வீர தீர செயலுக்கான அண்ணா பதக்கம்:
அதைத் தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில், வீர தீர செயலுக்கான அண்ணா பதக்கம், மத நல்லிணக்கத்துக்கான கோட்டை அமீர் பதக்கம், திருத்திய நெல் சாகுபடிக்கான விருதுகள், மதுவிலக்கு தொடர்பான காந்தியடிகள் பதக்கங்கள், சிறந்த காவல் நிலையத்துக்கான விருதுகளை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வழங்கினார். அப்போது, வீர தீர செயலுக்கான அண்ணா பதக்கம் ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலையும், ஒன்பதாயிரம் மதிப்புள்ள தங்க முலாம் பூசப்பட்ட பதக்கமும், சான்றிதழும் சென்னை மாவட்டத்தை சேர்ந்த தீயணைப்பு வீரர் வெற்றிவேலுக்கு வழங்கப்பட்டது.
கோட்டை அமீர் மத நல்லிணக்க பதக்கம்:
ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த அமீர் அம்சா என்பவருக்கு வழங்கப்பட்டது. அப்போது, ரூ.5 லட்சத்திற்கான காசோலையும், பதக்கம் மற்றும் சான்றிதழும் வழங்கப்பட்டது. விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை மீட்கவும், பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களை கொண்டு செல்லவும் சொந்தமாக அவசர ஊர்தியில் சேவை செய்து வருகிறார். கரோனாவில் பாதிக்கப்பட்ட நபர்களை மீட்டு சிகிச்சைக்கு அழைத்துச் சென்றுள்ளார். மேலும், கரோனா தொற்றால் உயிரிழந்த 200 பிரேதங்களை நல்லடக்கம் செய்யவும் உதவியுள்ளார்.
வேளாண் துறையின் சிறப்பு விருது:
நாராயணசாமி நாயுடு நெல் உற்பத்தி திறனுக்கான விருதை தேனி மாவட்டத்தைச் சேர்ந்த முருகவேல் பெற்றுள்ளார். மாநில அளவில் திருந்திய நெல் சாகுபடி தொழில்நுட்பங்களை கண்டுபிடித்து அதிக உற்பத்தி தரும் விவசாயிகளுக்கு ஆண்டு தோறும் வழங்கப்படுகிறது.
அந்த வகையில், ரூ.5 லட்சத்திற்கான காசோலையாகவும், தங்க முலாம் பூசப்பட்ட வெள்ளி பதக்கம் மற்றும் சான்றிதழ் ஆகியவை தேனி மாவட்டம் பெரியகுளம் வட்டம் வடுகபட்டி கிராமத்தைச் சேர்ந்த முருகவேல் என்ற விவசாயிக்கு வழங்கப்பட்டது. நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி திருந்திய நெல் சாகுபடியின் மூலம் ஒரு ஹெக்டருக்கு 10,815 கிலோ மகசூல் பெற்றுள்ளார்.
காந்தியடிகள் காவலர் பதக்கம்:
கள்ளச்சாராயத்தை கட்டுப்படுத்தியதில் மெச்சத்தக்க வகை பணிபுரிந்த தமிழ்நாடு காவல்துறையில் பணியாற்று காவலர்களுக்கு காந்தியடிகள் காவலர் பதக்கம் வழங்கப்படுகிறது. அத்துடன் 40 ஆயிரத்திற்கான காசோலையும், பதக்கமும் விழுப்புரம் மண்டல மத்திய நுண்ணறிவு பிரிவு காவல் ஆய்வாளர் சின்ன காமணன், விழுப்புரம் தாலுகா சட்டம் மற்றும் ஒழுங்கு காவல் நிலைய தலைமை காவலர் மகாமார்க்ஸ், துறையூர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு திருச்சி மாவட்டம் தலைமை காவலர் கார்த்திக், ஆயுதப்படை சேலம் மாவட்டம் இரண்டாம் நிலை காவலர் சிவா, சேலம் மாவட்டம் ஆயுதப்படை இரண்டாம் நிலை காவலர் பூமாலை ஆகியோருக்கு வழங்கப்பட்டது.
சிறந்த காவல் நிலையத்திற்கான முதலமைச்சரின் விருது:
- மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த எஸ்.எஸ் காலனி காவல் நிலையத்திற்கு முதலிடத்திற்கான விருதை காவல் ஆய்வாளர் காசி பெற்றுக் கொண்டார்.
- திருப்பூர் மாநகரத்தைச் சேர்ந்த திருப்பூர் வடக்கு காவல்நிலையத்திற்கு இரண்டாம் இடத்திற்கு அளிக்கப்பட்ட விருதை காவல் ஆய்வாளர் உதயக்குமார் பெற்றுக் கொண்டார்.
- திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி காவல் நிலையத்திற்கு மூன்றாம் இடத்திற்கான சிறந்த காவல் நிலைய விருத்தினை காவல் ஆய்வாளர் மதியரசன் பெற்றுக் கொண்டார்.
வாகன அணிவகுப்பு:
அதனைத் தொடர்ந்து , தமிழக கலை, பண்பாட்டு துறை சார்பில் பல்வேறு மாநில கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவிகளின் ஆடல் பாடல் நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதையடுத்து, தமிழகத்தின் பல்வேறு துறைகளின் திட்ட விளக்கங்கள் அடங்கிய 21 அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு நடைபெற்றது.
இதையும் படிங்க: 76-வது குடியரசு தின விழா: மயிலாடுதுறையில் தேசிய கொடி ஏற்றி வைத்தார் ஆட்சியர் மகாபாரதி!
செய்தித்துறை சார்பாக மங்கள இசை அணிவகுப்பு, செய்தித்துறை அணிவகுப்பு, காவல்துறையின் அணிவகுப்பு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அணிவகுப்பு, கூட்டுறவுத்துறை அணிவகுப்பு, ஊரக வளர்ச்சித்துறை அணிவகுப்பு, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அணிவகுப்பு, பள்ளிக்கல்வித்துறை அணிவகுப்பு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அணிவகுப்பு, கைத்தறி அணிவகுப்பு, சுற்றுலாத்துறை அணிவகுப்பு, சமூக நலத்துறை அணிவகுப்பு, கால்நடை பராமரிப்புத்துறை அணிவகுப்பு, பொது தேர்தல் துறை அணிவகுப்பு, தகவல் தொழில்நுட்பவியல் துறை அணிவகுப்பு, வீட்டு வசதித்துறை அணிவகுப்பு, வனத்துறை அணிவகுப்பு, இந்து சமய அறநிலையத்துறை அணிவகுப்பு, மீன் வளத்துறை மற்றும் மீனவர் நலத்துறை அணிவகுப்பு நடைபெற்றது.
பலத்த போலீஸ் பாதுகாப்பு:
மேலும், குடியரசுத் தின நிழச்சியில் முதலமைச்சரின் மனைவி துர்கா ஸ்டாலின், துணை முதலமைச்சர் அமைச்சர்கள், உயர்நீதிமன்ற நீதிபதிகள், அரசு உயர் அலுவலர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துக் கொண்டனர். பாதுகாப்பு கருதி மெரினா கடற்கரை காமராஜர் சாலை மற்றும் சுற்றுப் பகுதிகளில் ஐந்து அடுக்கு போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டு, சென்னையில் மட்டும் சுமார் 18 ஆயிரம் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.