தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

அயோத்தி சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை; 'டிஎன்ஏ டெஸ்ட் தேவை'.. அகிலேஷ் யாதவ் பேச்சால் கிளம்பிய சர்ச்சை! - Ayodhya Sexual harassment case - AYODHYA SEXUAL HARASSMENT CASE

Ayodhya minor girl Rape Case: அயோத்தியில் 12 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு டிஎன்ஏ சோதனை எடுக்க வேண்டும் என்று சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் கூறியது கடும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

அகிலேஷ் யாதவ் (கோப்புப்படம்)
அகிலேஷ் யாதவ் (கோப்புப்படம்) (credit - ANI)

By PTI

Published : Aug 4, 2024, 12:06 PM IST

அயோத்தி:உத்தரப் பிரதேச மாநிலம், அயோத்தியைச் சேர்ந்த 12 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். மேலும், சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரிய வந்த பிறகு இவ்விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது. அதனைத் தொடர்ந்து, சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த அயோத்தி போலீசார், கடந்த ஜூலை 30 அன்று அதே பகுதியில் பேக்கரி நடத்தி வரும் இருவரை கைது செய்தனர்.

மேலும், இந்த வழக்கில் கைதாகியுள்ள மொய்த் கான் சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்தவர் என்பது தெரிய வர, அரசியல் அரங்கில் இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சூழலில், உ.பியில் ஆளும் கட்சியான பாஜக மற்றும் பகுஜன் சமாஜ் ஆகியவை சமாஜ்வாதி கட்சி மீது கடும் விமர்சனங்களை வைத்து வருகின்றன.

அகிலேஷ் யாதவ் சர்ச்சை பேச்சு: இதற்கிடையே, செய்தியாளர்களைச் சந்தித்த உபி எதிர்க்கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதாகியுள்ளவர்களுக்கு டிஎன்ஏ சோதனை நடத்த வேண்டும் என்று கூறியது சர்ச்சையாகியுள்ளது.

டிஎன்ஏ சோதனை: மேலும் அவர், பாலியல் வன்கொடுமை வழக்கில் வெறும் குற்றச்சாட்டுகளைக் கூறி அரசியல் செய்யாமல் குற்றம் சாட்டப்பட்ட அனைவருக்கும் டிஎன்ஏ பரிசோதனை செய்து நீதி வழங்க வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு அரசு உடனடியாக ரூ.20 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும். சம்பவத்தை விசாரிக்காமல் அரசியல் காழ்ப்புணர்ச்சியால் சமாஜ்வாதி கட்சி மீது குற்றச்சாட்டுகளை வைக்கக்கூடாது. குற்றவாளிகள் யாராக இருந்தாலும் சட்டப்படி தகுந்த தண்டனை வழங்கப்பட வேண்டும். ஆனால், டிஎன்ஏ சோதனைக்குப் பிறகு குற்றச்சாட்டுகள் பொய் என்று நிரூபிக்கப்பட்டால், சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளையும் தப்ப விடக்கூடாது. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.

அகிலேஷ் யாதவின் இந்த பேச்சுக்கு உ.பி. முதல்வர் யோகி ஆதித்யாநாத், பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி ஆகியோர் கடுமையாக சாடியுள்ளனர்.

மாயாவதி விமர்சனம்: பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி, சமாஜ்வாதி ஆட்சியின்போது இதுபோன்ற வழக்குகளில் எத்தனை பேருக்கு டிஎன்ஏ பரிசோதனை எடுக்கப்பட்டது. அயோத்தி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக உ.பி. அரசு எடுத்து வரும் கடுமையான நடவடிக்கை நியாயமானதுதான். ​​இவ்வழக்கில் கைதாகியுள்ள மொய்த் கான் சமாஜ்வாதி கட்சியின் உறுப்பினர் என்பதால் அகிலேஷ் யாதவ் இப்படி ஒரு அறிக்கையை வெளியிடுவதாக விமர்சித்துள்ளார்.

மேலும், பாதிக்கப்பட்ட சிறுமி குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதாலும், கைதாகியுள்ள மொய்த் கான் சமூக வாக்குகள் அதிகமாக உள்ளதாலும் அகிலேஷ் யாதவ் இவ்வாறு நடந்துகொள்வதாக பாஜக ஐடி பிரிவு தலைவர் அமித் மாள்வியா குற்றம் சாட்டியுள்ளார்.

உபி அமைச்சர் கண்ணீர்: இதற்கு மத்தியில் பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தை நேரில் சந்தித்து கண்ணீர் விட்டு அழுத உபி அமைச்சர் சஞ்சய் நிஷாத் அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார். பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், சிறுமி வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களை சமாஜ்வாதி தலைவர்கள் காக்க முயற்சிப்பதாக குற்றம்சாட்டினார்.

அயோத்தியில் நடந்த இந்த கொடூர சம்பவம் குறித்து போலீஸ் தெரிவிக்கையில், குற்றம் சாட்டப்பட்ட இருவரும் இரண்டு மாதங்களுக்கு முன்பு சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து, அதனை வீடியோவாகவும் பதிவு செய்துள்ளனர். மருத்துவ பரிசோதனையில் பாதிக்கப்பட்ட பெண் கர்ப்பமாக இருப்பது தெரிய வந்ததை அடுத்து, வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறினர்.

முன்னதாக, அயோத்தியில் நடந்த சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் சரியான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பம் முதல்வர் யோகி ஆதித்யநாத்தைச் சந்தித்து முறையிட்டனர். அதனைத் தொடர்ந்து, சில அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்ட முதல்வர், குற்றம் சாட்டப்பட்டவர்கள் வைத்துள்ள பேக்கரியை புல்டோசர் வைத்து இடித்து நடவடிக்கை எடுத்துள்ளார். மேலும், இந்த விவகாரத்தில் இந்தியா கூட்டணியைச் சேர்ந்தவர்கள் அமைதி காப்பதாகவும் உ.பி. அரசியல் வட்டாரத்தில் விமர்சனம் எழுந்துள்ளது.

இதையும் படிங்க:நிலச்சரிவில் தப்பி யானைக் கூட்டத்தின் முன் அந்த நொடி.. மெய்சிலிர்க்கும் வயநாடு மூதாட்டியின் அனுபவம்

ABOUT THE AUTHOR

...view details