புதுடெல்லி: சீனாவில் ஏற்பட்டுள்ள எச்.எம்.பி.வி எனப்படும் மனித மெட்டாப்நியூமோ வைரஸ் தாக்கம் தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் குஜராத்தில் ஐந்து பேருக்கு கண்டறியப்பட்டுள்ளதாக அந்தந்த மாநிலங்கள் உறுதி செய்துள்ளன. தமிழகத்தில், சென்னையில் ஒரு குழந்தைக்கும், சேலத்தில் ஒரு குழந்தைக்கும் எச்.எம்.பி.வி வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது.
சீனாவில் இருந்து பரவி, இந்தியாவில் பல்லாயிரம் உயிர்களை கொன்று குவித்த கரோனா வைரஸ் தாக்கம் இன்னமும் மக்கள் மத்தியில் ஆறா சுவடாக இருக்கும் சூழலில், சீனாவில் இருந்து மற்றொரு புதிய வைரஸ் கிளம்பியிருப்பது சமூகத்தில் பீதியை துளிர்விட செய்துள்ளது. இதற்கு மத்தியில் தமிழக சுகாதாரத் துறை அளித்த விளக்கம் சற்று ஆறுதலை கொடுத்துள்ளது.
அதில், எச்.எம்.பி.வி வைரஸ் புதியதல்ல, 2001இல் கண்டறியப்பட்ட வைரஸ்தான். நீண்ட ஆண்டுகளாகவே இந்த வைரஸ் இருப்பதால் பொதுமக்கள் அச்சமடையத் தேவையில்லை. இந்த வைரஸ் சென்னையில் ஒருவருக்கும் சேலத்தில் ஒருவருக்கும் கண்டறியப்பட்டுள்ளது. இருவரின் உடல் நிலை சீராக உள்ளது. எச்.எம்.பி.வி தொடர்பாக மாநில அரசுகளுடன் மத்திய சுகாதாரத் துறை ஆலோசனை நடத்தி உள்ளது என்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.
இதையும் படிங்க: திபெத்தை உலுக்கிய நிலநடுக்கத்தில் 95 பேர் பலி! இந்தியாவிலும் உணரப்பட்ட நிலநடுக்கம்
இந்த நிலையில், இந்தியாவில் HMPV வைரஸ் தொற்றால் ஐந்து பேர் பாதிக்கப்பட்டுள்ளதால், இன்ஃப்ளூயன்ஸா ( ILI), கடுமையான சுவாச நோய்களுக்கான (SARI) கண்காணிப்பை அதிகரிக்கவும், எச்.எம்.பி.வி. பரவுவதைத் தடுப்பது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தவும் மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
மத்திய சுகாதார துறை அறிவுரை
மத்திய சுகாதார செயலாளர் புண்ய சலிலா ஸ்ரீவஸ்தவா நேற்று அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுடனான கூட்டத்திற்கு தலைமை தாங்கினார். அந்த கூட்டத்தில், நாட்டில் சுவாச நோய்கள் மற்றும் HMPV வழக்குகள் மற்றும் அவற்றை கையாளுவதற்கான சுகாதார நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது.
அதன்படி வெளியான அறிக்கையில், மனித மெட்டாப்நியூமோ வைரஸ் சுவாச பிரச்சனைகளை ஏற்படுத்தும் வைரஸ் என்றும் இந்த நோய்க்கிருமி வைரஸ் எல்லா வயதினருக்கும் சுவாச நோய்த்தொற்றுகளை ஏற்படுத்தும் எனவும் கூறியுள்ளது. மேலும், இந்த வைரஸ் தாக்கம் எங்கும் கடுமையான அளவில் உயரவில்லை. இருப்பினும் அந்தந்த மாநிலங்கள் சுவாச பிரச்சனைகளால் வருவோரை கண்காணிக்க வேண்டும். எச்.எம்.பி.வி, அனைத்து வயதினருக்கும், குறிப்பாக குளிர்காலம் மற்றும் வசந்த காலத்தின் துவக்க மாதங்களில் தொற்றுகளை ஏற்படுத்தக்கூடிய பல சுவாச வைரஸ்களில் ஒன்றாகும்.
சோப்பு மற்றும் தண்ணீருடன் அடிக்கடி கைகளை கழுவுதல் போன்ற எளிய நடவடிக்கைகளின் மூலம் வைரஸ் பரவுவதைத் தடுப்பது குறித்து மக்களிடையே விழிப்புணர்வை மாநிலங்கள் ஏற்படுத்த வேண்டும். கைகளை கழுவாமல் கண்கள், மூக்கு அல்லது வாயைத் தொடக்கூடாது. நோய் அறிகுறிகள் இருப்பவர்களிடம் நெருங்கிய தொடர்பைத் தவிர்ப்பது நல்லது'' என மத்திய சுகாதார துறை அறிவுறுத்தியுள்ளது.