மும்பை:இந்தியாவின்பிரபல தொழிலதிபரான ரத்தன் டாடாவின் இறுதிச் சடங்குகள் முழு அரசு மரியாதையுடன் மத்திய மும்பை பகுதியில் உள்ள மயானத்தில் வியாழக்கிழமை மாலை நடைபெற்றது. போலீசார் துப்பாக்கி குண்டுகள் முழங்க டாடாவின் உடலுக்கு மரியாதை செலுத்தினர்.
ரத்தன் டாடாவின் ஒன்றுவிட்ட சகோதரர் நோயல் டாடா உட்பட அவரது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் டாடா குழுமத்தின் தலைவர் என் சந்திரசேகரன் உள்ளிட்ட உயர்மட்ட நிர்வாகிகள் வோர்லியில் உள்ள சுடுகாட்டில் கூடியிருந்தனர்.
இறுதிச் சடங்குகள் பார்சி மரபுப்படி நடந்ததாக தகனக் கூடத்தில் இருந்த போதகர் ஒருவர் தெரிவித்தார்.தெற்கு மும்பையின் கொலாபாவில் உள்ள மறைந்த தொழிலதிபரின் பங்களாவில் மேலும் மூன்று நாட்கள் சடங்குகள் நடத்தப்படும் என்றும் அவர் கூறினார்.
முன்னதாக, ரத்தன் டாடாவின் உடல் இறுதிச் சடங்குகளுக்காக தெற்கு மும்பையில் உள்ள தேசிய கலை நிகழ்ச்சிகளுக்கான மையத்தில் (NCPA) இருந்து வொர்லிக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அவரது உடல் காலை 10.30 மணி முதல் பிற்பகல் 3.55 மணி வரை தெற்கு மும்பையில் உள்ள என்சிபிஏ-வில் வைக்கப்பட்டிருந்தது.
அங்கு வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மத்திய அரசின் சார்பில் ரத்தன் டாடாவுக்கு அஞ்சலி செலுத்தினார். மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, மகாராஷ்டிர துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ், மத்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் உள்ளிட்டோரும் டாடாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், அவரது மகள் எம்.பி. சுப்ரியா சுலே, மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே, ஆதித்ய பிர்லா குழுமத் தலைவர் குமாரமங்கலம் பிர்லா, இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்திகாந்த தாஸ் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களும் டாடாவுக்கு உறுதி அஞ்சலி செலுத்தினர்.
முன்னதாக, ரத்தன் டாடாவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் வியாழக்கிழமை அரசு முறை துக்கம் அனுசரிப்பதாக மகாராஷ்டிர மாநில அரசு அறிவித்திருந்தது.
ரத்தன் டாடாவின் உடல் வியாழன் காலை அவரது இல்லத்திலிருந்து வெள்ளை மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ஒரு சவப்பெட்டியில் பொதுமக்கள் அஞ்சலிக்காக NCPA க்கு கொண்டு செல்லப்பட்டது. சடலம் புறப்படும் முன், மும்பை போலீஸ் இசைக்குழுவினர் அவருக்கு அஞ்சலி செலுத்தினர்.
இந்தியாவின் பிரபல தொழிலதிபரான ரத்தன் டாடா, தமது 86 ஆவது வயதில் உடல்நலக் குறைவு காரணமாக மும்பையில் புதன்கிழமை இரவு காலமானார்.