பெங்களூரு : கர்நாடகாவில் ஒயிட் பீல்ட் சாலையில் இயங்கி வரும் பிரபல தனியார் உணவகத்தில் கடந்த வெள்ளிக்கிழமை நிகழ்ந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் கடை ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் என 10 பேர் படுகாயம் அடைந்தனர். இந்நிலையில். ப்ரூக் பீல்ட் பகுதியில் சாலையில் சந்தேகத்திற்கு உரிய வகையில் சுற்றித் திரிந்த நபரை சிசிடிவி காட்சிகளை சோதனையிட்டதன் மூலம் கண்டறிந்ததாக போலீசார் தெரிவித்து உள்ளனர்.
கடந்த வெள்ளிக்கிழமை இரவு இந்த சம்பவம் தொடர்பாக ஒருவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருவதாக கூறப்பட்ட நிலையில், அதுகுறித்து கருத்து தெரிவிக்க போலீசார் மறுத்துவிட்டனர். மேலும், குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்த இடத்தில் அறிவியல் பூர்வமான சோதனை மேற்கொண்டு வருவதாகவும், கடந்த 2022ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மங்களூருவில் நடந்த குக்கர் வெடி விபத்திற்கு இதற்கும் ஏதும் தொடர்பு உள்ளதா என விசாரணை நடத்தி வருவதாகவும் போலீசார் தெரிவித்து உள்ளனர்.
இதனிடையே கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா, இந்த குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக மூத்த உள்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. முன்னதாக இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தை அரசியலாக்க வேண்டாம் என முதலமைச்சர் சித்தராமையா கேட்டுக் கொண்டது குறிப்பிடத்தக்கது.