ஐதராபாத்:18வது மக்களவை தேர்தல் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்றது. இதனையடுத்து மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று (ஜூன்.4) காலை முதலே எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
இந்நிலையில் பாரதிய ஜனதா கட்சி தேர்தலுக்கு முன்பாக அமைத்த தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்கள் 292 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளனர். இதில் பாஜக தனியாக 240 தொகுதிகளை வென்றுள்ளது. 2019 மக்களவைத் தேர்தலோடு ஒப்பிடுகையில் பாஜகவுக்கு இது பின்னடைவு தான்.
அதே நேரத்தில் எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி 200 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. பாஜகவின் கோட்டையாக கருதப்படும் உத்தரபிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் அக்கட்சி கடும் பின்னடைவை சந்தித்துள்ளது. ராஜஸ்தானில் கடந்த 2 தேர்தல்களோடு ஒப்பிடுகையில், இந்தியா கூட்டணிக்கு இம்மாநிலம் கடும் சவாலாக இருக்கும் என எதிர்பார்ப்பு இருந்தது.
2019ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் இம்மாநிலத்தில் உள்ள 25 தொகுதிகளையும் பாஜக கைப்பற்றியிருந்தது. 2014ம் ஆண்டு தேர்தலில் கூட 24 தொகுதிகளை கைப்பற்றியிருந்தது. இந்நிலையில் தற்போதைய தேர்தலில், பாஜக கூட்டணி வேட்பாளர்கள் 14 தொகுதிகளிலும் . காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்கள் 10 தொகுதிகளிலும் வெற்றி பெற்றனர்.