அஜ்மீர்:ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் மக்களவை தொகுதிக்குட்பட்ட கிராமம் பல்வந்தா. அங்கு நீண்ட நாட்களாக குடிநீர் பிரச்சினை நிலவுவதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அரசு அதிகாரிகள் மற்றும் மாநில அமைச்சர்கள் உள்ளிட்டோரிடம் பலமுறை மனு மற்றும் புகார் அளித்ததாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
இருப்பினும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என மக்கள் தெரிவிக்கின்றனர். மேலும் குடிநீர் வேண்டி அரசுக்கு எதிராக பலமுறை போராட்டம் நடத்தியும் கண்டுகொள்ளவில்லை என மக்கள் குற்றம்சாட்டி உள்ளனர். இந்நிலையில் அரசுக்கு தகுந்த வகையில் பாடம் புகட்டவும் தங்களது பிரச்சினையை மாநில அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லவும் மக்களவை தேர்தலை புறக்கணிப்பதாக கிராம மக்கள் தெரிவித்து உள்ளனர்.
இதில் பலவந்தா கிராமம் உள்ள புஸ்கர் சட்டப் பேரவை தொகுதி எம்எல்ஏ சுரேஷ் சிங் ராவாத் மாநில நீர்வளத் துறை அமைச்சராக பொறுப்பு வகித்து வருவது குறிப்பிடத்தக்கது. அரசு அதிகாரிகள் கிராம மக்களுடன் தொடர் பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் பலன் இல்லை. கிராம மக்கள் தேர்தலை புறக்கணிக்கும் தங்களது நிலைப்பாடில் உறுதியாக இருப்பதாக தெரிவித்து உள்ளனர்.
பலவந்தா உளப்ட சுற்றுவட்டாரத்தை சேர்ந்த 60க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பிசல்பூர் பைப்லைன் திட்டத்தை தங்களது குடிநீர் ஆதாரமாக நம்பி உள்ளனர். இருப்பினும் தேர்தல் காரணமாக இந்த திட்டம் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது. பலவந்தா கிராமத்தில் ஏறத்தாழ 3 ஆயிரம் வசித்து வருகின்றனர்.
காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் கிராம மக்கள் யாரும் வாக்களிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. போலீசார் மற்றும் நீர்வளத்துறை அதிகாரிகள் கிராம மக்களுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை வாக்களிக்க வருமாறு அழைத்து வருகின்றனர். இதுகுறித்து பிசல்பூர் பைப்லைன் திட்ட இயக்குநர் ஒம்கர் மன்டல் கூறுகையில், ஏறத்தாழ 64 கிராமங்களுக்கு குடிநீர் வழங்கும் வகையில் 150 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திட்டம் உருவாக்கப்பட்டு உள்ளதாகவும், தேர்தலுக்கு பின்னர் திட்டத்திற்கான டென்டர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
முன்னதாக கடந்த மார்ச் 10ஆம் தேதி பலவந்தா கிராமத்திற்கு பைப்லைன் திட்டத்தின் தண்ணீர் தரக்கோரி கிராம மக்கள் தீர்மானம் நிறைவேற்றி மாநில நீர்வளத் துறை அமைச்சருக்கு வழங்கினர். இதையடுத்து விரைந்து கிராமத்திற்கு தண்ணீர் வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக அமைச்சர் உறுதி அளித்தாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க :இவிஎம், விவிபாட் இயந்திரங்கள் வழக்கு: அனைத்து மனுக்களும் தள்ளுபடி - உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு கூறுவது என்ன? - EVM VVPAT Machine Case