டெல்லி: இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் மற்றும் அவர்களின் மீன்பிடிப் படகுகளை விடுவிக்க, இலங்கை அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிர்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி கடிதம் எழுதியுள்ளார்.
மயிலாடுதுறை மீனவர்கள் 37 பேர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக, கடந்த செப்டம்பர் 21ஆம் தேதி இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டனர். மேலும், அவர்களின் மீன்பிடிப் படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டன. இந்நிலையில், இலங்கை சிறையில் வாடும் அனைத்து இந்திய மீனவர்கள் மற்றும் அவர்களின் மீன்பிடிப் படகுகள், கருவிகள் ஆகியவற்றை விடுவிக்க வலியுறுத்தி, இலங்கையின் புதிய அதிபராக பதவியேற்றுள்ள அனுரா குமார திசநாயகேவுக்கு, மயிலாடுதுறை காங்கிரஸ் எம்பி ஆர்.சுதா சமீபத்தில் கடிதம் எழுதியிருந்தார்.
இந்நிலையில், எம்பி ஆர்.சுதா கடிதத்தின் அடிப்படையில், தமிழக மீனவர்களை உடனடியாக விடுதலை செய்யவும், அவர்களின் படகுகளையும் விடுவிக்கவும், இலங்கை அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிர்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி கடிதம் அனுப்பியுள்ளார்.
அந்த கடிதத்தில் ராகுல் காந்தி கூறியுள்ளதாவது; "கடந்த செப்டம்பர் 21ஆம் தேதி அன்று தமிழக மீனவர்கள் 37 பேர் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டதையும், அவர்களின் படகுகளை இலங்கை அதிகாரிகள் கைப்பற்றியது தொடர்பாகவும் உங்களுக்கு இந்த கடிதத்தை எழுதுகிறேன்.