டெல்லி: நாடாளுமன்றத்தில் இன்றைய விவாதத்தின்போது எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் எம்பியுமான ராகுல் காந்தி வயநாடு நிலச்சரிவின் தாக்கத்தையும், அதனால் ஏற்பட்டுள்ள சேதம் குறித்தும் விளக்கினார்.
அப்போது அவர், '' நான் எனது சகோதரியுடன் வயநாடு சென்று நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளை பார்வையிட்டேன். இந்த (நிலச்சரிவு) துயர நிகழ்வின் தாக்கத்தினால் ஏற்பட்டுள்ள வலியை நேரில் பார்த்தேன். நிலச்சரில் இதுவரை 200க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். பல பேர் காணாமல் போயுள்ளனர். இறப்பு எண்ணிக்கை 400ஐ தாண்டவும் வாய்ப்புள்ளது.
இதனை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும். நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களின் இழப்பீடு தொகையை அதிகப்படுத்த வேண்டும். போதிய அளவில் மறுவாழ்வு தொகுப்பை அவர்களுக்கு வழங்க வேண்டும். பல பேர் தங்களது முழு குடும்பத்தையும் இழந்து தனி ஆளாக இருக்கின்றனர். அது ஒரு குழந்தையாகவோ அல்லது வயதான நபராகவோ இருக்கலாம்.