அசாம்:காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவரும் கேரள மாநிலத்தின் வயநாடு தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தி பாரத் ஜோடோ யாத்திரையின் இரண்டாவது கட்டமாக பாரத் ஜோடோ நியாய யாத்திரையை மணிப்பூர் மாநிலத்தின் தவுபலில் ஜனவரி 14ஆம் தேதி தொடங்கினார்.
இந்த யாத்திரை கடந்த வியாழன் அன்று அசாம் மாநிலத்தில் நுழைந்தது. நியாய யாத்திரை அசாமில் நுழைந்ததிலிருந்து அசாம் மாநில முதலமைச்சர் ஹிமந்த் பிஸ்வா சர்மாவை, ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்து வருகின்றார். பிஸ்வநாத் சாரியாலி பகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, நியாய யாத்திரையில் பொதுமக்களைப் பங்கேற்க விடாமல் அசாம் அரசு தடுப்பதாகவும், இந்தியாவிலேயே ஊழலில் அதிகம் திளைக்கும் முதலமைச்சர் ஹிமந்த் பிஸ்வா சர்மா தான் எனவும் விமர்சித்திருந்தார்.
இந்நிலையில் ராகுல் காந்தியின் நியாய யாத்திரை நேற்று (ஜனவரி 21) நகோன் மாவட்டத்திற்கு வந்தடைந்தது. யாத்திரையில் வந்த வாகனங்களை மறித்த பாஜகவினர் கோஷங்கள் இட்டு ராகுல் காந்தியின் யாத்திரையைத் தடுத்தனர். அப்போது பேருந்தில் இருந்த ராகுல் காந்தி தனக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்களை நோக்கிப் பறக்கும் முத்தங்கள் அளித்தார். இந்த காணொலி வலைத்தளங்களில் வைரலாகி இருந்தது.
இந்நிலையில், புகழ்பெற்ற வைஷ்ணவ துறவியான ஸ்ரீமந்த சங்கர் தேவ் பிறந்த ஊரானா பட்டதிரவா நகோன் மாவட்டத்தில் அமைந்துள்ளது. ராகுல் காந்தி அங்குச் செல்ல முயன்றார். அதற்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் ராகுல்காந்தி சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார்.