மதுரை: பாஸ்போர்ட் வழங்க உத்தரவிட கோரி அமைச்சர் கோவி செழியன் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவுக்கு உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக (திமுக) அமைச்சரவையில் கடந்தாண்டு செப்டம்பரில் 5 ஆவது முறையாக மாற்றம் செய்யப்பட்டது. அப்போது, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு மீண்டும் மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறையும், ஆவடி நாசருக்கு சிறுபான்மையினர் நலத்துறையும் கொடுக்கப்பட்டது. மேலும், புதிதாக சேர்க்கப்பட்டுள்ள கோவி.செழியனுக்கு முக்கிய துறையான உயர்கல்வித் துறையும், ராஜேந்திரனுக்கு சுற்றுலாத் துறையும் வழங்கப்பட்டது. அதன்படி தற்போது கோவி.செழியன் உயர்கல்வித் துறையை கவனித்து வருகிறார்.
இந்த நிலையில், தஞ்சாவூர் மாவட்டம் ராஜாங்கநல்லூர் பகுதியை சேர்ந்த கோவி செழியன், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், நான் கடந்த 09.09.2024 அன்று எனக்கு பாஸ்போர்ட் வழங்க விண்ணப்பித்தேன். 13.09.2024 அன்று, மதியம் 02.15 மணியளவில், அசல் பதிவுகளை சரிபார்ப்பதற்கு சென்றேன். நான் நேரில் ஆஜராகி, அனைத்து அசல் சான்றிதழ்களையும் அளித்தேன். சரிபார்ப்பு முடிந்து விட்டது.
இதையும் படிங்க: 'போலீசுக்கு நேரமில்லை.. இனி சிபிஐ விசாரிக்கட்டும்'.. ராஜேந்திர பாலாஜி வழக்கில் ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!
திருச்சி மண்டல பாஸ்போர்ட் அதிகாரி, பந்தலூர் காவல் நிலையத்திற்கு சரி பார்ப்பிற்கு அனுப்பினார். பின்னர் கிராம மக்கள் நடத்திய ஆர்ப்பாட்டம் தொடர்பான குற்றவியல் வழக்கு என் மீது நிலுவையில் உள்ளது என காவல் துறை அதிகாரி அறிக்கை அனுப்பி உள்ளார்.
பாஸ்போர்ட் வழங்குவதற்கு வழக்கு நிலுவையில் இருப்பது ஒரு தடையல்ல. எனவே, எனக்கு பாஸ்போர்ட் வழங்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதி விக்டோரியா கவுரி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, ஏற்கனவே உள்ள உத்தரவுகளின் அடிப்படையில், மனுதாரருக்கு பாஸ்போர்ட் வழங்க நடவடிக்கை எடுக்க திருச்சி மண்டல பாஸ்போர்ட் அதிகாரிக்கு உத்தரவிட்டார்.